Loading...
'படம் ரிலீஸாகும் வரை சம்பளம் வேண்டாம்': 'இந்தியன் 3' படத்திற்காக ஷங்கர் எடுத்த முடிவு
இந்தியன் 3 வெளியாகும் வரை சம்பளம் பெறப்போவதில்லை என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

'படம் ரிலீஸாகும் வரை சம்பளம் வேண்டாம்': 'இந்தியன் 3' படத்திற்காக ஷங்கர் எடுத்த முடிவு

எழுதியவர் Vasuki
Oct 14, 2026
06:20 pm

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவான 'இந்தியன் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான 'இந்தியன் 3' திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாகவும், தரமாகவும் ரசிகர்களுக்கு வழங்க இயக்குநர் ஷங்கர் முடிவு எடுத்துள்ளார். வலைப்பேச்சு கூறிய செய்தியின்படி, இப்படத்தின் இறுதிக்கட்ட VFX மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு பட்ஜெட்டை குறைக்காமல் முழு வீச்சில் பணிகளை மேற்கொள்ளும் வகையில், படம் வெளியாகும் வரை தனது சம்பளத்தை பெறப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸிடம் ஷங்கர் உறுதியளித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துல்லியமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு வரும் நிலையில், 2027-ஆம் ஆண்டு கோடைக்கால வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன்

VFX பணிகளுக்கு சமரசம் இல்லை

'இந்தியன் 2' திரைப்படத்தின் பின்னடைவை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்கில், 'இந்தியன் 3' படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்பதில் இயக்குநர் ஷங்கர் உறுதியாக உள்ளார்.

இதற்கு மாற்றாக, தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட்டை குறைக்காமல் திட்டமிட்டபடி முழுத் தரத்துடன் செலவு செய்ய வேண்டும் என்றும், தனக்கான சம்பள பாக்கியை படம் ரிலீசான பிறகு பெற்றுக்கொள்வதாகவும் அவர் லைகா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், "'இந்தியன் 2' படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு முற்றிலும் நேர்மாறாக 'இந்தியன் 3' அமையும்; மக்கள் இப்படத்தைக் கொண்டாடுவார்கள்" என முழு நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT