பிக் பாஸ் 10-இல் இருந்து வெளியேறிய ராகவ் ரங்கநாதன் வைல்டு கார்டு மூலம் மீண்டும் வருவாரா?
செய்தி முன்னோட்டம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வந்த நடிகர் ராகவ் ரங்கநாதன், காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக நேற்று திடீரென வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அளித்த வாக்குகள் குறைவாக இருந்ததால் அவர் வெளியேறவில்லை. மாறாக அவரது காலில் ஏற்பட்டுள்ள லிகமென்ட் டேர் எனப்படும் தசைநார் கிழிவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியதாலேயே, அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு பிக் பாஸ் நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பிரியாவிடை
மருத்துவர்கள் அறிவுறுத்தலால் வெளியேற்றம்
காயம் அடைந்த போதிலும் பிக் பாஸ் வீட்டிலேயே தொடர்ந்து இருக்கலாமா என ராகவ் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், கடுமையான போட்டிகள் மற்றும் டாஸ்க்குகளில் பங்கேற்பது கால் பாதிப்பை மேலும் தீவிரமாக்கும் என்பதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி, சக போட்டியாளர்களிடம் விடைபெற்று வெளியேறுமாறு ராகவிடம் தெரிவித்தார்.
பிக் பாஸ் வீட்டில் யாரிடமும் முரண்படாமல் அமைதியான சுபாவத்துடன் பழகி வந்த ராகவ், விடைபெறும் தருணத்தில் சக போட்டியாளர்களுக்காகத் தனது தனித்துவமான குரலில் நெகிழ்ச்சியாகப் பாடல் பாடினார்.
எதிர்பார்ப்பு
வைல்டுகார்டு மூலம் மீண்டும் வருவாரா?
ராகவ் விடைபெற்ற போது பேசிய பிக் பாஸ், "ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்தோ, மக்கள் வாக்களிக்காமலோ நீங்கள் வெளியேறவில்லை. பயணம் தான் முக்கியம் ராகவ், இலக்கு மாறிக்கொண்டே இருக்கும்".
"உங்கள் உடலைச் சரிசெய்து கொள்ள முழு ஒத்துழைப்பு கொடுங்கள். திரும்பி வரும்போது இரண்டு, மூன்று பாடல்களை எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்று கூறியது பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து குணமடைந்த பிறகு, அவர் மீண்டும் வைல்டு கார்டு முறையில் வீட்டிற்குள் நுழைவார் என்பதையே பிக் பாஸின் வார்த்தைகள் சூசகமாக உணர்த்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
தன்யா மற்றும் லட்சுமி பிரியா அழுது பிரியாவிடை கொடுத்த நிலையில், ராகவின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.