கத்திப்பாரா பாலம் அருகே விபத்து! கார் மோதி ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீனுக்கு காயம்
செய்தி முன்னோட்டம்
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது. கோயம்பேட்டில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது, பக்கவாட்டு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வந்த மற்றொரு வாகனம் மீது அமீனின் கார் மோதியது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் அமீன் மற்றும் அவருடன் பயணித்த அவரது நண்பர் இருவருக்கும் பெரியளவில் காயங்கள் இன்றி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் அவர் நலமுடன் உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணை
மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் போலீஸ் விசாரணை
விபத்தைத் தொடர்ந்து அமீன் மற்றும் அவரது நண்பர் இருவரும் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதலுதவிச் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து உடனடியாக வீடு திரும்பினர்.
அதேபோல் மற்றொரு காரில் பயணித்து காயமடைந்த நபர் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு வாகனங்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடகர்
பாடகராக வளர்ந்து வரும் ஏ.ஆர்.அமீனின் பயணம்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீன், கடந்த 2015-ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் தனித்துவமான பாடல்களைப் பாடி வரும் அமீன், தனது தந்தையின் சர்வதேச இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடி வருகிறார்.
சமீபத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான பெடி திரைப்படத்தில் இடம்பெற்ற சிகிரி சிகிரி பாடலின் தமிழ் பதிப்பையும், ஜாஸ்லீன் ராயலுடன் இணைந்து பீகி பீகி பாடலையும் பாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.