குறைவான விலை கொண்ட 'ப்ரைம் லைட்' சந்தா வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான்
அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் ஆப்ஷன் தற்போது அமலில் இருக்க, குறைந்த விலை கொண்ட 'அமேசான் ப்ரைம் லைட்' என்ற புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான் நிறுவனம். ப்ரைம் வசதியில் கொடுக்கப்படும் வசதிகளை விட குறைந்த வசதிகளுடன் ப்ரைம் லைட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான். ப்ரைமானது தற்போது வருடத்திற்கு ரூ.1,499 விலையில் கிடைக்கிறது. ப்ரைம் லைட் வசதியானது வருடத்திற்கு ரூ.999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ப்ரைமில் ஒன் டே டெலிவரி, சேம் டே டெலிவரி ஆகிய வசதி வழங்கப்படும் நிலையில், ப்ரைம் லைட்டில் 2 டே டெலிவரி வசதியை வழங்குகிறது அமேசான். மேலும், ப்ரைமில் ரூ.50 கூடுதல் கட்டணத்தில் மார்னிங் டெலிவரி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ப்ரைம் லைட்டில் அதற்கு ரூ.175 வசூலிக்கப்படவிருக்கிறது.
ப்ரைம் vs ப்ரைம் லைட்:
அமேசான் ப்ரைமைப் போலவே, ப்ரைம் லைட் பயனர்களுக்கும் ப்ரைம் வீடியோ வசதியை வழங்குகிறது அமேசான். ப்ரைம் வாடிக்கையாளர்கள் பல சாதனங்களில், விளம்பரம் இல்லாமல் அல்ட்ரா-HD தரத்தில் உள்ளடக்கங்களைக் காண முடியும். ஆனால், ப்ரைம் லைட் வாடிக்கையாளர்கள் இரண்டு சாதனங்களில் மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதுவும் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் மியூசிக், ப்ரைம் கேமிங் மற்றும் ப்ரைம் ரீடிங் வசதிகளுக்கான அக்சஸும் வழங்கப்பட்டு வரும் நிலையில், ப்ரைம் லைட் வாடிக்கையாளர்களுக்கு இந்த எந்த வசதியும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது அமேசான். ப்ரைம் லைட்டைப் போலவே மேலும் பல திட்டங்களை இனி வரும் நாட்களில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அமேசான்.