போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'இறுதி சுற்று' நடிகை ரித்திகா சிங்
இந்தியாவின் பெருமைக்குரிய மல்யுத்த வீர, வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் அவர் கைது செய்யப்படவில்லை என்ற குற்றசாட்டை முன் வைத்து டெல்லியில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாகவும் இந்தியா கேட்டில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்திருந்தனர். போலீசாரும் அதனை தடுத்து நிறுத்தப்போவதில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித் பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்று வலியுறுத்தியதால் கடைசி நேரத்தில் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.
ஆதரவு தெரிவித்த நடிகை ரித்திகா சிங்
இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகை ரித்திகா சிங் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "மல்யுத்த வீரர்களை நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிற்கு பின்னால் இருப்பதுப்போல நாமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும்" என்று ட்விட் செய்து தனது ஆதரவை பதிவிட்டுள்ளார். "அவர்களின் குரல்களை ஒடுக்குவது முறையானதல்ல. இது நம்மிடையே புரிதலின்மையே உருவாக்கும். இந்த பிரச்சனை வெகு விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்," எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரித்திகா சிங்கும் ஒரு குத்து சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.