தனுஷுக்கு முன் முருகனாக நடித்த 5 மாஸ் நடிகர்கள்! தமிழ் சினிமாவில் இவங்கள மறக்க முடியுமா!
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் தங்களது ஐந்தாவது படைப்பாக 'தமிழ் முருகன்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களின் பின்னணியில், எழுத்தாளர் அறிவுமதியின் புத்தகத்தைத் தழுவி இத்திரைப்படம் உருவாகிறது. தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் முருகன் பற்றிய படம் அறிவிக்கப்பட்ட நிலையில், தனுஷின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமா உலகிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தனுஷுக்கு முன்பாக வெள்ளித்திரையில் முருகக் கடவுளாக நடித்த 5 முக்கிய சினிமா நடிகர்களை இங்கே காண்போம்.
நடிகர் சிவக்குமார்
கந்தன் கருணை படத்தில் தெய்வீக முகம் காட்டிய சிவக்குமார்
கடந்த 1967 ஆம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற பக்தித் திரைப்படமான கந்தன் கருணையில் நடிகர் சிவக்குமார் முருகக் கடவுளாக நடித்திருந்தார். சூரபத்மனை வதம் செய்வது மற்றும் தெய்வானை, வள்ளி ஆகியோரைத் திருமணம் செய்யும் காட்சிகளில் அவரது அபார நடிப்பு தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தது. இத்திரைப்படத்தில் அவர் ஏற்ற முருகனின் கதாபாத்திரம், தமிழ் சினிமாவில் சிவக்குமாருக்கு ஒரு தெய்வீக முகவரியையும் மாபெரும் அடையாளத்தையும் பெற்றுத் தந்தது.
எம்ஜிஆர்
தனிப் பிறவி திரைப்படத்தில் முருகனாகத் தோன்றிய எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர், கடந்த 1966 ஆம் ஆண்டு வெளியான தனிப் பிறவி திரைப்படத்தில் முருகக் கடவுளாகத் தோன்றியுள்ளார். படத்தின் முதன்மைக் கதையாக இல்லாமல், ஒரு முக்கியமான கனவுக் காட்சியின் போது அவர் முருகனாகத் தோன்றுவார். இக்காட்சியில் அவருக்கு ஜோடியாக, வள்ளியின் கதாபாத்திரத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளம்
ஸ்ரீ முருகன் மற்றும் ஆதி பராசக்தி படங்களில் அசத்திய ரவிகுமார் மற்றும் ஸ்ரீதேவி
கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ முருகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் ரவிக்குமார் முருகனாக முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். அதே படத்தில் முருகனின் சிறுவயது மற்றும் இளம் வயதுக் கதாபாத்திரங்களில் முறையே பேபி சுமதி மற்றும் மாஸ்டர் ரகு ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், நடிகை ஸ்ரீதேவி தனது குழந்தை நட்சத்திரப் பருவத்தில், 1971ல் வெளியான ஆதி பராசக்தி திரைப்படத்தில் குழந்தை முருகனாக நடித்து அசத்தினார். இதில் ஜெயலலிதா பராசக்தி தேவியாக நடித்திருந்தார்.
நடிகர் சூர்யா
எதற்கும் துணிந்தவன் படத்தில் முருகனாகத் தோன்றிய சூர்யா
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு சுவாரஸ்யமான காட்சி இடம்பெற்றிருக்கும். அப்படத்தில் வரும் "உள்ளம் உருகுதையா" என்ற பாடலின் போது, நடிகர் சூர்யா கையில் வேல் ஏந்தி, பாரம்பரிய உடையில் முருகக் கடவுளின் தோற்றத்தில் அச்சு அசலாகத் தோன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.