Loading...
2000 பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு; மேடையில் தனுஷ் பேசியது என்ன தெரியுமா?
தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி சந்திப்பில் 2,000 பெண் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

2000 பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு; மேடையில் தனுஷ் பேசியது என்ன தெரியுமா?

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
05:45 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை மற்றும் சந்திப்புக் கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பெண் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய பிறகு முதன்முறையாக இத்தகைய மகளிர் சந்திப்பு நடைபெற்றதால், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் இது பெரும் கவனத்தை ஈர்த்தது.

5 நிமிட பேச்சு

வெள்ளி விளக்கு பரிசு

சமீபகாலமாக நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் அவர் முக்கிய அரசியல் கருத்துகளை முன்வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், மேடையில் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே பேசிய தனுஷ், எந்தவொரு அரசியல் விவகாரத்தையும் பேசாமல் தவிர்த்தார்.

மேடையில் பேசிய அவர், "உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள். பெண்கள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். அனைவரும் பார்த்துப் பத்திரமாக வீட்டிற்குச் செல்லுங்கள்" என்று கூறி முடித்துக் கொண்டார்.

தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 2,000 பெண்களுக்கும் தலா ஒரு வெள்ளி காமாட்சி அம்மன் விளக்குப் பரிசாக வழங்கப்பட்டதுடன், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

குடும்பத்தினர் வருகை

ரசிகைகளின் எதிர்பார்ப்பு

இந்த நிகழ்வின் போது தனுஷின் சகோதரிகளான கார்த்திகா தேவி மற்றும் விமலா கீதா ஆகியோர் அரங்கத்திற்கு வருகை தந்து, நிர்வாகிகள் உணவு அருந்தும் பகுதிக்குச் சென்று உபசரிப்பு குறித்துக் கேட்டறிந்தனர்.

அவர்களுடனும் மகளிர் அணியினர் உற்சாகமாகப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

தனுஷின் இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசிய சில பெண் நிர்வாகிகள், "தமிழகத்திற்கு நல்லது செய்யவே தனுஷ் தயாராகி வருகிறார். இதுவரை யாரும் செய்யாத நன்மைகளை அவர் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.

அரசியலில் தனுஷ் களமிறங்குவாரா என்ற பேச்சுகள் நிலவி வரும் சூழலில், அரசியல் கலப்பின்றி சுருக்கமாக நடைபெற்ற இந்த மகளிர் சந்திப்பு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT