பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி
கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவருமான TP கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (பிப் 5) காலமானார். 'வீடு மனைவி மக்கள்' என்ற திரைப்படத்தின் இயக்குனராக தமிழ் திரையுலகத்தில் அறிமுகம் ஆனார். மண் மணம் கமழும், கிராமத்துக் கதைகளத்தில் பல்வேறு கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ராமராஜனின் எங்க ஊரு காவல்காரன், நவரச நாயகன் கார்த்திக் நடித்த பாண்டி நாட்டு தங்கம், பாட்டு வாத்தியார், மற்றும் நடிகர் பிரபுவின் நடிப்பில் பட்ஜெட் பத்மநாதன், மிடில் கிளாஸ் மாதவன், மற்றும் பந்தா பரமசிவம் என்று மூன்று மெகா ஹிட் படங்களை தந்தவர். பல திரைபப்டங்களில் சிறிய ஆனால் முக்கியமான பாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
அடுத்தடுத்து திரையுலகில் இழப்பு, நெருங்கிய நண்பரின் இறப்பால் கலங்கிய முதல்வர்
TP கஜேந்திரன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். முதல்வரும், மறைந்த இயக்குனர் TP கஜேந்திரனும் கல்லூரித் தோழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும், சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஒன்றாக படித்தனர். கல்லூரி காலத்தில் தொடங்கிய நட்பு பல ஆண்டுகள் நீடித்தது. அது மட்டுமில்லாமல், சமீபத்தில் உடல்நலக் குறைவால் இயக்குனர் பாதிக்கப்பட்ட காலத்திலும், முதல்வர் அவரை சந்தித்து நலம் விசாரிக்க சென்றிருந்தார். நேற்று (பிப் 5) பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைந்த செய்தியின் அதிர்ச்சி இன்னும் நீங்காதா நிலையில், இயக்குனர் கஜேந்திரனின் மறைவு திரையுலகை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.