LOADING...
இலங்கை, வியட்நாம் நாடுகளுக்கு 'அப்பர் மிடில் இன்கம்' அந்தஸ்து வழங்கியது உலக வங்கி! இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?
இலங்கை, வியட்நாம் நாடுகளுக்கு 'அப்பர் மிடில் இன்கம்' அந்தஸ்து வழங்கியது உலக வங்கி

இலங்கை, வியட்நாம் நாடுகளுக்கு 'அப்பர் மிடில் இன்கம்' அந்தஸ்து வழங்கியது உலக வங்கி! இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 03, 2026
04:51 pm

செய்தி முன்னோட்டம்

உலக வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் உலக நாடுகளின் புதிய வருமான வகைப்பாடு பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் 'அப்பர் மிடில் இன்கம்' (Upper Middle Income) என்ற உயர்தர நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் பட்டியலுக்கு முன்னேறியுள்ளன. பல ஆண்டுகாலத் தொடர் பொருளாதார வளர்ச்சி மற்றும் மீட்சியைத் தொடர்ந்து இந்த நாடுகளுக்கு இந்த மிக முக்கியமான இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்த இலங்கை

கடந்த 2022 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக சரிந்து, திவால் நிலைக்கு சென்ற இலங்கை, தற்போது உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய மீளெழுச்சி கதையாக மாறியுள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. நிதி மற்றும் சுற்றுலாத் துறைகளின் அசாத்திய வளர்ச்சியால், கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் உண்மையான ஜிடிபி 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம், கடந்த 2019ல் முதன்முறையாக இந்த அந்தஸ்தைப் பெற்று, பின்னர் பொருளாதார நெருக்கடியால் இழந்த பெருமையை இலங்கை தற்போது மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசியா

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வளர்ச்சி

இலங்கையுடன் சேர்த்து வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் இந்த உயர்தர நடுத்தர வருவாய் பிரிவிற்குள் நுழைந்துள்ளன. வியட்நாம் கடந்த 2009 முதலும், பிலிப்பைன்ஸ் 1980களின் பிற்பகுதியிலிருந்தும் லோயர் மிடில் இன்கம் பிரிவிலேயே தேங்கியிருந்த நிலையில், தற்போது இந்த முன்னேற்றம் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அந்த நாடுகளில் பெருமளவு அதிகரிக்கும். இந்த புதிய அறிவிப்பின் மூலம் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் 5 முக்கியப் பொருளாதார நாடுகளும் அப்பர் மிடில் இன்கம் அல்லது அதற்கு மேல் என்ற நிலையை எட்டியுள்ளன.

Advertisement

இந்தியா

இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?

இந்த அண்டை நாடுகளின் வளர்ச்சிக்கு மத்தியில், இந்தியா இன்னும் 'லோயர் மிடில் இன்கம்' (Lower-Middle-Income) என்ற கீழ்நிலை நடுத்தர வருவாய் கொண்ட நாடாகவே தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தியா இதே பிரிவில்தான் இருந்து வருகிறது. உலக வங்கியின் தற்போதைய கணக்கீட்டின்படி, இந்தியாவின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் சுமார் $2,500 முதல் $2,700 வரை மட்டுமே உள்ளது. இது அப்பர் மிடில் இன்கம் அந்தஸ்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வரம்பான $4,496ஐ விட மிகக் குறைவாகும்.

Advertisement

வகைப்படுத்தும் முறை

உலக வங்கி நாடுகளை எவ்வாறு வகைப்படுத்துகிறது?

உலக வங்கி உலக நாடுகளை குறைந்த வருவாய், கீழ் நடுத்தர வருவாய், உயர் நடுத்தர வருவாய் மற்றும் அதிக வருவாய் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. தனிநபர் மொத்த தேசிய வருமானம் $1,136 முதல் $4,495 வரை உள்ள நாடுகள் கீழ் நடுத்தர வருவாய் பிரிவிலும், $4,496 முதல் $13,935 வரை உள்ள நாடுகள் உயர் நடுத்தர வருவாய் பிரிவிலும் சேர்க்கப்படும். நாட்டின் எல்லைக்குள் உற்பத்தியாகும் மதிப்பை மட்டும் கணக்கிடும் ஜிடிபி போலல்லாமல், உலகெங்கிலும் உள்ள அந்நாட்டு குடிமக்கள் மற்றும் வணிகங்களின் ஒட்டுமொத்த வருமானத்தை அளவிடும் ஜிஎன்ஐ அடிப்படையிலேயே இந்தத் தரம் பிரிக்கப்படுகிறது.

Advertisement