Loading...
ரூ.2000க்கு மேல் யுபிஐ பேமெண்ட் செய்தால் 0.5% கட்டணமா? உண்மை நிலவரம் இதுதான்
ரூ.2000க்கு மேல் யுபிஐ பேமெண்ட் செய்யும் பெரு நிறுவனங்களுக்கு எம்டிஆர் கட்டணம் விதிக்க மத்திய அரசு திட்டம்

ரூ.2000க்கு மேல் யுபிஐ பேமெண்ட் செய்தால் 0.5% கட்டணமா? உண்மை நிலவரம் இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 18, 2026
03:20 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் முதுகெலும்பாக விளங்கும் யுபிஐ அமைப்பில் மிக முக்கியமான கொள்கை மாற்றம் ஒன்று வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டும் வகையில், ரூ. 2,000க்கு மேல் நடக்கும் பெரிய மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் (எம்டிஆர்) கட்டணத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டம் ஒப்புதல் பெற்றால், தகுதிவாய்ந்த பெரிய பரிவர்த்தனைகளின் மீது அதிகபட்சமாக 0.5 சதவீதம் வரை எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படலாம். இது குறித்த இறுதி அறிவிப்பு அடுத்த ஒரு மாதத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது.

யாருக்கு விலக்கு?

சிறு வணிகர்கள் மற்றும் கடைகளுக்கு முழுமையான விலக்கு

இந்த புதிய எம்டிஆர் கட்டண விதிமுறையானது சிறு வணிகர்களையும், தெருவோரக் கடைக்காரர்களையும் எந்தவிதத்திலும் பாதிக்காது என்பது ஒரு நிம்மதியான செய்தியாகும்.

ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வரை விற்றுமுதல் கொண்ட சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு, பரிவர்த்தனைத் தொகை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்த எம்டிஆர் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதனால் இந்த கூடுதல் கட்டண சுமையானது பெருநிறுவனங்கள், பெரிய வணிக வளாகங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களை மட்டுமே குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) என்றால் என்ன?

எம்டிஆர் (MDR) என்பது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் செலுத்தும் பணத்தை ஏற்றுக்கொள்வதற்காக, வணிகர்கள் அல்லது கடைகள் தங்களது வங்கிகள் மற்றும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு செலுத்தும் ஒரு குறிப்பிட்ட சதவீத சேவை கட்டணமாகும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகச் செயலாக்குவது, சர்வர் உள்கட்டமைப்பைப் பராமரிப்பது மற்றும் செயலிகளின் செயல்பாடுகளைத் தடையின்றி இயக்குவதற்கான செலவுகள் இந்த எம்டிஆர் கட்டணம் மூலமே ஈடுகட்டப்படுகின்றன.

பொதுவாக, இந்த எம்டிஆர் கட்டணம் வாடிக்கையாளர்களின் பில்களில் நேரடியாகக் காட்டப்படாது என்றாலும், பெரிய நிறுவனங்கள் இந்தச் செலவை தங்களது தயாரிப்புகளின் விலையிலேயே சேர்த்துக் கணக்கிடுவது வழக்கம்.

ADVERTISEMENT

பாதிப்பு

எத்தனை சதவீத யுபிஐ பரிவர்த்தனைகள் இதனால் பாதிக்கப்படும்?

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான அன்றாட யுபிஐ பரிவர்த்தனைகள் இந்த புதிய விதியின் கீழ் வராது என்பது தெளிவாகிறது.

பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு இடையே நடக்கும் (P2M) ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் விபரம் இதோ:

86 சதவீதம்: ரூ. 500 அல்லது அதற்கும் குறைவான மதிப்புடையவை.

10 சதவீதம்: ரூ. 501 முதல் ரூ. 2,000 வரை மதிப்புடையவை.

4 சதவீதம் மட்டுமே: ரூ. 2,000 என்ற வரம்பைத் தாண்டுபவை.

எனவே, இந்தியாவில் நடக்கும் வெறும் 4 சதவீத பெரிய மதிப்பிலான வணிகப் பரிவர்த்தனைகள் மட்டுமே இந்த புதிய எம்டிஆர் கட்டண வரம்பிற்குள் வரும்.

ADVERTISEMENT

தற்போதைய தேவை

முன்னதாக எம்டிஆர் நீக்கப்பட்டதற்கான காரணமும் தற்போதைய தேவையும்

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைத் மக்களிடையே தீவிரமாக ஊக்குவிப்பதற்காக, கடந்த ஜனவரி 2020 இல் யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை அரசு முற்றிலும் பூஜ்ஜியமாக மாற்றியது.

அதற்குப் பதிலாக ரூ. 2,000க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு அரசு 0.15% மானியம் வழங்கி வந்தது.

ஆனால், யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நிதியாண்டு 2017 இல் 2 கோடியிலிருந்து நிதியாண்டு 2026 இல் 24,100 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப சர்வர் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான செலவில் வெறும் 11 விழுக்காட்டை மட்டுமே அரசாங்கத்தின் மானியம் ஈடுகட்டுவதால், இந்தத் துறையை வணிக ரீதியாகத் தக்கவைக்க எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டு வருவது அவசியமாகியுள்ளது.

ADVERTISEMENT