நகர்ப்புறப் பெண்களுக்கு அதிகரிக்கும் சவால்! செப்டம்பரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்வு! மத்திய அரசு அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் செப்டம்பர் மாதத்தில் 5.0% ஆக மாற்றமின்றி நிலையாக உள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று வெளியிட்ட காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS) மாதாந்திர அறிக்கையில் இத்தரவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் நிலவும் நிலையான வேலைவாய்ப்பு சூழல், நகர்ப்புறங்களில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை சவாலை சமன் செய்து ஒட்டுமொத்த விகிதத்தை நிலைகொள்ள செய்துள்ளது.
நகர்ப்புற பெண்கள்
நகர்ப்புறப் பெண்களிடையே அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 6.8% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 6.9% ஆக உயர்ந்துள்ளது.
நகர்ப்புற ஆண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1%-லிருந்து 6.0% ஆகக் குறைந்த போதிலும், பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.9%-லிருந்து 9.2% ஆக அதிகரித்ததே நகர்ப்புற சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
அதேவேளையில், ஒட்டுமொத்த அளவில் ஆண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9% என்ற நிலையான அளவில் தொடர்கிறது.
பெண்களின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை 5.1%-லிருந்து 5.2% ஆகக் சற்றே உயர்ந்துள்ளது.
கிராமங்கள்
கிராமப்புறச் சூழலும் தொழிலாளர் பங்கேற்பு விகிதமும்
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.1%-லிருந்து 4.2% ஆக சற்றே உயர்ந்தபோதிலும், கடந்த ஆண்டின் 4.6% உடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.
கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.9% ஆகப் பதிவாகி, 2026-ஆம் ஆண்டின் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் (LFPR) செப்டம்பரில் 55.5% ஆகப் பதிவாகியுள்ளது.
நகர்ப்புறப் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 25.4%-லிருந்து 25.9% ஆக உயர்ந்து அக்டோபர் 2025-க்குப் பிறகு உச்சத்தை எட்டியுள்ளது.
கணக்கெடுப்பு
தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் மற்றும் கணக்கெடுப்பு முறை
நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR) செப்டம்பரில் 52.7% ஆக உள்ளது.
நகர்ப்புறத்தில் WPR விகிதம் 47.2% ஆக உயர்ந்து ஆண்களுக்கு 71.0% ஆகவும் பெண்களுக்கு 23.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடத்திய இந்த மாதாந்திர ஆய்விற்காக, நாடுமுழுவதும் கிராமப்புறங்களில் 2,11,333 நபர்களிடமிருந்தும், நகர்ப்புறங்களில் 1,59,180 நபர்களிடமிருந்தும் நேரடியாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டு இந்த தொழிலாளர் சந்தை மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன.