12 லட்சத்திற்கு வரி பூஜ்ஜியம்! 2026-27 நிதியாண்டில் வரியை சேமிக்க 10 முக்கிய வழிகள்
செய்தி முன்னோட்டம்
நிதியாண்டின் இறுதியில் அவசர அவசரமாக முதலீடு செய்வதற்கு பதிலாக, நிதியாண்டின் தொடக்கத்திலேயே சரியான திட்டமிடலை மேற்கொள்வது அதிக வருமான வரியை சேமிக்க உதவும். 2026-27 நிதியாண்டிலும் புதிய வரி முறையே இயல்புநிலைத் தேர்வாக நீடிக்கிறது. எனவே, உங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்ப வரியைக் குறைக்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் 10 முக்கிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
#1
புதிய மற்றும் பழைய வரி முறைகளை ஒப்பிடுதல்
முதலில் உங்கள் வருமானத்திற்குப் புதிய மற்றும் பழைய வரி முறையில் எவ்வளவு வரி வருகிறது என்பதைக் கணக்கிட வேண்டும்.
புதிய வரி முறையில் ₹12 லட்சம் வரை நிகர பெறத்தக்க வருமானம் உள்ளவர்களுக்கு பிரிவு 87A ரீபேட் மூலம் வரி முழுமையாக விலக்களிக்கப்படுகிறது.
அதேசமயம், வீட்டு வாடகை விலக்கு, வீட்டுக் கடன் மற்றும் 80C போன்ற பெரிய விலக்குகளை பயன்படுத்துபவர்களுக்கு பழைய வரி முறையே ஏற்றதாக இருக்கும்.
#2
தொடக்கத்திலேயே முதலீடுகளைத் திட்டமிடுதல்
மார்ச் மாத இறுதியில் அவசரப்பட்டு வரி சேமிப்பு முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் பிபிஎஃப், ஆயுள் காப்பீடு, எல்எஸ்எஸ் பரஸ்பர நிதிகள் போன்ற 80C பிரிவின் கீழ் வரும் ₹1.5 லட்சம் வரையிலான முதலீடுகளை ஆண்டு முழுவதும் சிறுக சிறுகப் பிரித்துத் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும்.
#3
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறுதல்
தேசிய ஓய்வூதியத் திட்டம் கூடுதல் வரி சேமிப்பு வாய்ப்பை அளிக்கிறது.
உங்கள் வேலைவழங்குநர் உங்கள் என்பிஎஸ் கணக்கில் செலுத்தும் பங்களிப்பிற்கு பிரிவு 80CCD(2) இன் கீழ் வரி விலக்கு பெறலாம்.
இந்த சலுகையைப் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களும் தடையின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
#4
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை மறுஆய்வு செய்தல்
பழைய வரி முறையில் செக்ஷன் 80D இன் கீழ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் செலுத்தும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கு ₹25,000 வரையிலும், மூத்த குடிமக்களான பெற்றோருக்கு ₹50,000 வரையிலும் வரி விலக்கு பெறலாம்.
வெறும் வரி சேமிப்பிற்காக மட்டும் அல்லாமல், குடும்ப நிதிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
#5
வீட்டுக் கடனுக்கான வரி சலுகைகளை சரியாகப் பயன்படுத்துதல்
சொந்த வீடைக் கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ பெற்ற கடனில், அசல் தொகைக்கு 80C இன் கீழ் ₹1.5 லட்சம் வரையிலும், வட்டித் தொகைக்குப் பிரிவு 24(b) இன் கீழ் ₹2 லட்சம் வரையிலும் பழைய வரி முறையில் விலக்கு பெறலாம்.
புதிய வரி முறையில் சொந்த வீட்டின் வட்டிக்கு விலக்கு இல்லை என்பதால் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
#6
மூலதன ஆதாயங்களை திறம்படக் கையாளுதல்
பங்குகள், பரஸ்பர நிதிகள் அல்லது சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயங்களுக்கு உரிய வரி விலக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
நஷ்டத்தில் இருக்கும் பங்குகளை விற்று லாபத்தோடு ஈடுசெய்யும் டேக்ஸ் லாய்ஸ் ஹார்வெஸ்டிங் முறையைப் பயன்படுத்தலாம்.
ஆனால், வெறும் வரிக்காக மட்டுமே பங்குகளை விற்கக் கூடாது.
#7
அனைத்து வருமான ஆதாரங்களையும் கண்காணித்தல்
வங்கி வட்டி, பங்காதாயம் (Dividend), வாடகை வருமானம் மற்றும் ஃப்ரீலான்ஸ் வருமானங்கள் அனைத்தும் உங்கள் மொத்த வரிப் பொறுப்பைப் பாதிக்கும்.
எனவே, உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை ஃபார்ம் 26AS மற்றும் வருமான வரித் துறையின் ஆண்டறிக்கையோடு ஒப்பிட்டு, சரியான வருமான கணக்கை தாக்கல் செய்ய ஆயத்தமாக வேண்டும்.
#8
சம்பளக் கட்டமைப்பை சீரமைத்தல்
சம்பளதாரர்கள் தங்களின் நிறுவனத்திடம் பேசி, வரி சேமிப்பிற்கு ஏதுவான உணவு கூப்பன்கள் மற்றும் தொலைபேசிப் படிகள் போன்றவறை சம்பள அமைப்பில் சேர்க்கலாம்.
புதிய வரி முறையில் சம்பளதாரர்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கழிவு ₹75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
#9
முன்பண வரி மற்றும் டிடிஎஸ் சரிபார்த்தல்
ஃப்ரீலான்ஸிங், தொழில் அல்லது முதலீடுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் காலாண்டு தோறும் முன்பண வரியை முறையாக செலுத்த வேண்டும்.
சம்பளதாரர்கள் தங்களின் நிறுவனங்கள் சரியான முறையில் டிடிஎஸ் பிடிக்கிறதா என்பதைப் படிவம் 16 மூலம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
#10
சரியான ஆவணங்களை பராமரித்தல்
முதலீட்டுச் சான்றுகள், காப்பீட்டுப் ரசீதுகள், வீட்டு வாடகை ரசீதுகள் மற்றும் வீட்டுக் கடன் வட்டிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை முறையான கோப்புகளாகப் பராமரிக்க வேண்டும்.
வருமான வரித் துறை கேட்கும் போது இந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பது, எதிர்கால நோட்டீஸ்கள் மற்றும் சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.