சர்க்கரை விலை உயர்வால் இனிப்புகள் விலையேற்றம்: தமிழ்நாட்டில் பால்கோவா, அல்வா விலை உயர்வு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் சர்க்கரை விலை ஒரே மாதத்தில் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சாமானிய மக்களின் மாதாந்திர மளிகை பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை எதிர்நோக்கியுள்ள வேளையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம், குடும்பங்கள் மட்டுமின்றி சிறு மற்றும் குறு இனிப்பு உற்பத்தியாளர்களையும் பெருமளவில் பாதித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் கரும்பு உற்பத்தி சரிவடைந்துள்ளது. மேலும், சர்க்கரையை விட எத்தனால் தயாரிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் சர்வதேச அளவில் பிரேசில் நாட்டின் உற்பத்தி சரிவுமே இந்த விலை உயர்விற்குப் பிரதான காரணங்களாகும்.
விலையேற்றம்
தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புகள் விலையேற்றம்
சர்க்கரை மற்றும் நிலக்கடலை போன்ற மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய இனிப்புகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா: ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ.320-லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா: திருநெல்வேலியின் அடையாளமாகத் திகழும் இருட்டுக்கடை அல்வா உட்பட மாவட்டத்தின் பிற கடைகளில் அல்வா மற்றும் பால்கோவா விலைகள் கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி கடலை மிட்டாய்: வெல்லம் மற்றும் நிலக்கடலை விலை உயர்வாலும், சர்க்கரை விலையேற்றத்தாலும் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.220-லிருந்து ரூ.270 ஆக உயர்ந்துள்ளது.
உணவகங்கள்
உணவகங்கள் மற்றும் டீ கடைகளுக்கு நெருக்கடி
வரவிருக்கும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு அட்வான்ஸ் தொகையை பெற்ற கேட்டரிங் உரிமையாளர்கள், தற்போதைய திடீர் விலை உயர்வால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
வேலூர் ஆற்காட்டின் புகழ்பெற்ற மக்கான் பேடா மற்றும் பால்கோவா தயாரிப்பாளர்களும் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், தேநீர் கடைகளில் டீ மற்றும் காபியின் விலை ரூ.1 முதல் ரூ.3 வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை மத்திய அரசு தடை விதித்துள்ளதுடன் பதுக்கல்களுக்கு எதிராக உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், சந்தையில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.