சமூக வலைதள வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா? யூடியூபர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கான முழுமையான வழிகாட்டி
செய்தி முன்னோட்டம்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் பலருக்கு முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளன. பிராண்ட் புரோமோஷன், விளம்பர வருவாய், அபிலியேட் லிங்க்கள் எனப் பல வழிகளில் பணம் ஈட்டினாலும், இவை அனைத்தும் இந்திய வருமான வரி சட்டத்தின் கீழ் வரிக்கு உட்பட்டவை என்பதைப் பலரும் அறிவதில்லை. கிரியேட்டர் பொருளாதாரத்தில் நீங்கள் ஈட்டும் வருமானத்தை எப்படித் தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டி இதோ.
வகைப்படுத்தல்
சமூக வலைதள வருமானம் எப்படி வகைப்படுத்தப்படுகிறது?
இந்திய வருமான வரித் துறை, சமூக வலைதளங்கள் மூலம் வரும் வருமானத்தை 'தொழில் அல்லது வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபம்' என்றே கருதுகிறது. நீங்கள் ஒரு முழுநேர கிரியேட்டராக இருந்தால், பிராண்ட் உடன்படிக்கைகள், விளம்பர வருவாய் மற்றும் மெர்ச்சண்டைஸ் விற்பனை மூலம் வரும் பணம் உங்கள் வருமான வரி அடுக்கின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். ஒருவேளை இது உங்கள் பகுதி நேர வேலையாக இருந்தால், அது 'இதர ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம்' என வகைப்படுத்தப்படலாம்.
பரிசுகள்
இலவசப் பரிசுகளுக்கும் வரி உண்டு
நிறுவனங்கள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்த கிரியேட்டர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், அழகு சாதனப் பொருட்கள் அல்லது ஆடைகளை இலவசமாக வழங்கலாம். வருமான வரி சட்டத்தின் பிரிவு 194Rஇன் படி, ஒரு நிதியாண்டில் நீங்கள் பெறும் இலவசப் பொருட்களின் மதிப்பு ₹20,000 ஐத் தாண்டினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் 10% டிடிஎஸ் பிடிக்க வேண்டும். அந்தப் பொருளை நீங்கள் விளம்பரத்திற்குப் பிறகு உங்களிடமே வைத்துக்கொண்டால், அதன் சந்தை மதிப்பை உங்கள் வருமானமாகக் காட்டி வரி செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி விதிமுறைகள்
வருமான வரி தவிர, கிரியேட்டர்கள் ஜிஎஸ்டி விதிகளையும் கவனிக்க வேண்டும். உங்கள் கன்டென்ட் உருவாக்கம் சேவைகள் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் ₹20 லட்சம் (சில மாநிலங்களில் ₹10 லட்சம்) தாண்டினால், ஜிஎஸ்டி பதிவு செய்வது கட்டாயமாகும். பதிவு செய்த பிறகு, பிராண்ட் விளம்பரங்களுக்கு சுமார் 18% ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும்.
ஐடிஆர் படிவங்கள்
எந்த ஐடிஆர் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்?
கிரியேட்டர்கள் தங்களது வருமானத்தின் அளவைப் பொறுத்து சரியான படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: ITR-4 (Sugam): நீங்கள் 'Presumptive Taxation' திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால் இதைப் பயன்படுத்தலாம். இதில் உங்கள் மொத்த வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை (பொதுவாக 50%) லாபமாகக் காட்டி, விரிவான கணக்குப் புத்தகங்கள் பராமரிக்காமல் வரி செலுத்தலாம். ITR-3: உங்கள் வருமானம் அதிகமாக இருந்து, முறையான கணக்கு வழக்குகளைப் பராமரித்து, தேய்மானம் (Depreciation) மற்றும் செலவுகளைக் கழிக்க விரும்பினால் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்புகள்
கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
கேமரா, மடிக்கணினி, மைக்ரோஃபோன் போன்ற கருவிகள் வாங்கிய செலவு மற்றும் எடிட்டிங் மென்பொருட்களுக்கான சந்தா கட்டணங்களை உங்கள் மொத்த வருமானத்தில் இருந்து செலவாகக் காட்டி வரியைக் குறைக்கலாம். பிராண்ட்களுடன் போட்ட ஒப்பந்தங்கள், இன்வாய்ஸ்கள் மற்றும் பேமெண்ட் ஆதாரங்களை முறையாகச் சேமித்து வைப்பது வருங்கால ஆய்வுகளின் போது உதவும். சமூக வலைத்தள வருமானத்தை முறையாக வெளிப்படுத்துவது சட்ட ரீதியான சிக்கல்களைத் தவிர்ப்பதுடன், வங்கி கடன்கள் பெறவும் உங்களுக்கு உதவும்.