திடீர் சரிவில் தத்தளிக்கும் பங்குச்சந்தை; ஐடி பங்குகளுக்கு என்ன ஆச்சு? முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
செய்தி முன்னோட்டம்
பிப்ரவரி 20, 2026 அன்று இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் உற்சாகமாகத் தொடங்கி, சென்செக்ஸ் சுமார் 0.8% வரை உயர்ந்தது. இருப்பினும், மதிய வேளையில் முதலீட்டாளர்கள் லாபப் பதிவில் ஈடுபட்டதால், சென்செக்ஸ் தனது உச்சத்திலிருந்து சுமார் 400 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டி 25,550 நிலைக்குக் கீழே வர்த்தகமானது. குறிப்பாக ஐடி துறையில் ஏற்பட்ட தொடர் சரிவு சந்தையின் வளர்ச்சியைப் பாதித்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. அவை பின்வருமாறு:- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்து 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரு முடிவை எடுக்க வேண்டும், இல்லையெனில் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இது மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை உயர்வு
உலகளாவிய பதற்றம் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு என்பதால், எண்ணெய் விலை உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வருகையால் ஐடி நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நீடிக்கிறது. இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா போன்ற முன்னனி பங்குகள் இன்று 1% க்கும் மேல் சரிந்தன.
அந்நிய முதலீட்டாளர்கள்
அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்
கடந்த சில நாட்களாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து தொடர்ந்து முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். பிப்ரவரி 19 அன்று மட்டும் சுமார் ₹880 கோடி மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இது சந்தையில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.95 ஆகக் குறைந்துள்ளது. மேலும், சந்தையின் பயத்தைக் குறிக்கும் இந்தியா விக்ஸ் குறியீடு 7.5% அதிகரித்து 14.49 நிலையை எட்டியுள்ளது. இது சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகிறது.