ரூபாய் மதிப்பு சரிவுக்கு செக்! 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சிறப்பு டாலர் சாளரம்; ஆர்பிஐ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் நிலையில், நாட்டின் முக்கியமான மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தினசரி டாலர் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சிறப்பு டாலர் சாளரத்தைத் திறந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டும் டாலர் தேவையை சமாளிக்கவும், வெளிச்சந்தையில் ரூபாயின் மதிப்பிற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
பொதுத்துறை நிறுவனங்கள்
3 முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் பயன்பெறும்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று முன்னணி பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சிறப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் முழுமையான தினசரி டாலர் தேவைகளை ஆர்பிஐ நிர்ணயம் செய்த வங்கிகள் மூலம் நேரடியாக விற்பனை செய்யும்.
இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 12, 2026 திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
இந்திய ரூபாய் சரிவு
வரலாறு காணாத சரிவை சந்திக்கும் இந்திய ரூபாய்
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து 96.73 என்ற நிலையை எட்டியுள்ளது.
நடப்பு 2026 காலண்டர் ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 7 சதவீதத்திற்கும் அதிகமாகக் சரிவைக் கண்டுள்ளது.
ரூபாய் மதிப்பு 97 என்ற உளவியல் அளவைக் கடந்துவிட்டால், சந்தையில் ஊக வணிகம் அதிகரித்து மேலும் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதைக் கட்டுப்படுத்தவே ரிசர்வ் வங்கி இந்தத் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கட்டுப்பாடுகள்
அந்நியச் செலாவணி விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கம்
எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக டாலர் வழங்குவதன் மூலம் வெளிச்சந்தையில் டாலருக்கான தேவையும், அதன் ஏற்ற இறக்கங்களும் கணிசமாகக் குறையும்.
மேலும் அந்நியச் செலாவணி டெரிவேட்டிவ்ஸ் மீதான விதிகளையும் ஆர்பிஐ பலப்படுத்தியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரூபாய் சார்ந்த ஒப்பந்தங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான வரம்புகளை ஆர்பிஐ வெகுவாகக் குறைத்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் நிதி சந்தையை ஸ்திரப்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.