இப்பவே வித்திடுங்க; பிட்காயின் $20,000 வரை சரியும்? பிரபல பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
பிரபல பொருளாதார நிபுணரும் பிட்காயின் விமர்சகருமான பீட்டர் ஷிஃப், பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிட்காயின் விலை $50,000 என்ற முக்கிய ஆதரவு நிலையை உடைத்தால், அது $20,000 வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "பிட்காயினை இப்போதே விற்றுவிடுங்கள்!" என்று தனது எக்ஸ் தள பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். அக்டோபர் 7, 2025 அன்று பிட்காயின் தனது வாழ்நாள் உச்சமான $1,26,198 ஐத் தொட்டது. ஆனால் அங்கிருந்து தற்போது சுமார் 46% சரிந்து, $67,000 - $68,000 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
சரிவு
2026 தொடக்கம் முதல் சரிவு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயின் 23% சரிவைச் சந்தித்துள்ளது. இது பிட்காயின் வரலாற்றிலேயே மிக மோசமான ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சி விலைகளில் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. எப்போதுமே தங்கத்தை ஆதரிக்கும் பீட்டர் ஷிஃப், அமெரிக்க டாலர் விரைவில் வீழ்ச்சியடையும் என்றும், அதற்கு மாற்றாகத் தங்கம் மட்டுமே இருக்கும் என்றும் வாதிடுகிறார். 2008 நெருக்கடியை விட மோசமான ஒரு பொருளாதாரச் சிக்கலை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதாகவும், அதில் பிட்காயின் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார். மத்திய வங்கிகள் தங்களது டாலர் கையிருப்பைத் தவிர்த்து, தங்கத்தை வாங்கி வருவது இதற்கு ஒரு சான்று என்கிறார் ஷிஃப்.
சந்தை நிலவரம்
தற்போதைய சந்தை நிலவரம்
ஷிஃபின் எச்சரிக்கைக்கு மத்தியிலும், இன்று (பிப்ரவரி 20, 2026) பிட்காயின் விலை லேசான ஏற்றத்தைச் சந்தித்து $67,243 என்ற அளவில் உள்ளது. லண்டன் பங்குச் சந்தையில் புதிய கிரிப்டோ தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது சந்தைக்குச் சற்று வலு சேர்த்துள்ளது. இருப்பினும், $50,000 என்ற நிலைக்குக் கீழே சென்றால் பெரும் சரிவு ஏற்படும் என்ற ஷிஃபின் வாதம் முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.