LOADING...
சம்பளதாரர்களுக்கு நற்செய்தி: பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு 50% வரி விலக்கு
மெட்ரோ நகரங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு 50% வரி விலக்கு

சம்பளதாரர்களுக்கு நற்செய்தி: பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு 50% வரி விலக்கு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2026
03:47 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள 'வரைவு வருமான வரி விதிகள் 2026'-ன் படி, பழைய வரி முறையை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார மையங்களான பெங்களூரு, ஐதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் ஊழியர்கள் இனி கூடுதல் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வரி விலக்கை பெற முடியும். தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நான்கு நகரங்கள் மட்டுமே 'மெட்ரோ' நகரங்களாக கருதப்படுகின்றன. இங்கு வசிப்பவர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரை HRA வரி விலக்காக கோர முடியும்.

கோரிக்கை

நீண்ட கால கோரிக்கை ஏற்பு

மேலே குறிப்பிட்ட நகரங்களை தவிர பிற நகரங்களுக்கு HRA 40 சதவீதமாக மட்டுமே இருந்து வந்தது. 1990-களுக்கு பிறகு இந்த பட்டியலில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஐடி (IT) மற்றும் உற்பத்தி துறையின் எழுச்சியால் பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, இந்த நகரங்களையும் 50 சதவீத வரி விலக்கு பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

பலன்

யார் பலன் பெற முடியும்?

இந்தச் சலுகை ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதை பெற விரும்புவோர் சில முக்கிய நிபந்தனைகளைக் கவனிக்க வேண்டும். இந்த வரி விலக்கு பழைய வரி முறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிய வரி முறையில் இத்தகைய விலக்குகள் கிடையாது. உண்மையான HRA, செலுத்திய வாடகையில் 10% கழித்தது அல்லது அடிப்படை சம்பளத்தில் 50% - இவற்றில் எது குறைவோ அதற்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும். ஆண்டு வாடகை ₹1 லட்சத்தை தாண்டினால், நில உரிமையாளரின் PAN எண் மற்றும் முறையான வாடகை ஒப்பந்தம் சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க பிப்ரவரி 22, 2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement