LOADING...
60 ஆண்டுகால சட்டத்திற்கு குட்பை! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்

60 ஆண்டுகால சட்டத்திற்கு குட்பை! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2026
01:21 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக, அறுபது ஆண்டுகால பழமையான வருமான வரி சட்டத்திற்கு பதிலாக, 'புதிய வருமான வரிச் சட்டம் 2025' வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். புதிய சட்டத்தின்படி, வரி செலுத்துவோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் 819 ஆக இருந்த சட்டப்பிரிவுகள் 536 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குழப்பத்தை ஏற்படுத்தி வந்த 'மதிப்பீட்டு ஆண்டு' (Assessment Year) மற்றும் 'முந்தைய ஆண்டு' (Previous Year) போன்ற சொற்களுக்கு பதிலாக, இனி 'டாக்ஸ் இயர்' (Tax Year) என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படும்.

மாற்றங்கள்

புதிய சட்டத்தின் கீழ் வரப்போகும் புதிய மாற்றங்கள்

வரி செலுத்துவோருக்கு போதிய அவகாசம் அளிக்கும் வகையில், வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், காலக்கெடு முடிந்த பிறகு வரி தாக்கல் செய்தாலும், அபராதமின்றி TDS ரீஃபண்ட் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து TDS விதிகளும் இனி பிரிவு 393-ன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

வரி விகிதங்கள்

வரி விகிதங்களில் மாற்றமில்லை

இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரி அடுக்குகளில் (Tax Slabs) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 4 லட்சம் ரூபாய் வரையிலான வரிவிலக்கு உள்ளிட்ட புதிய வரி முறையே தொடரும். டிஜிட்டல் முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டம், வரி தொடர்பான வழக்குகளைக் குறைத்து, சாமான்ய மக்களும் எளிதாக வரி தாக்கல் செய்ய உதவும் என்று நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Advertisement