Loading...
சிறுவர்களின் மனநல பாதிப்பு! மெட்டா நிறுவனத்திற்கு $567 மில்லியன் கூடுதல் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி
சிறார் பாதுகாப்பு வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு கூடுதலாக $567 மில்லியன் அபராதம்

சிறுவர்களின் மனநல பாதிப்பு! மெட்டா நிறுவனத்திற்கு $567 மில்லியன் கூடுதல் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
02:56 pm

செய்தி முன்னோட்டம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு 567 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,700 கோடிக்கும் மேல்) அபராதம் விதித்து அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுவர்களின் மனநலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது மற்றும் பாலியல் சுரண்டல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதற்கட்ட வழக்கில் ஏற்கனவே $375 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது $567 மில்லியன் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்த அபராதத் தொகை $942 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கட்டுப்பாடு

நிதிப் பங்கீடு மற்றும் இளைஞர்களுக்கான கட்டுப்பாட்டு விதிகள்

இந்த அபராதத் தொகையில் $420 மில்லியன் நிதி, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மருத்துவ மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொகையானது விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

நிதி அபராதத்துடன் சேர்த்து, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாதாந்திர பயன்பாட்டு நேரக் கட்டுப்பாடு, அறிவிப்புகளுக்கான வரம்புகள், பெரியவர்களுடனான தொடர்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஏஐ சாட்பாட்களுக்கான பாதுகாப்புகள் ஆகிய பல புதிய கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்துமாறு மெட்டா நிறுவனத்திற்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

மேல்முறையீடு

வயது சரிபார்ப்பு சட்டம் மற்றும் மெட்டாவின் மேல்முறையீட்டு முடிவு

அதேவேளையில், சிறுவர்களின் வயதை கட்டாயமாக சரிபார்க்கும் அமைப்பை உருவாக்குமாறு மெட்டாவிற்கு நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

அமெரிக்க ஃபெடரல் சட்டம் 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கத் தடை விதித்துள்ளதாலும், பிற சமூக வலைதளங்களை விடுத்து மெட்டாவிற்கு மட்டும் இதை அமல்படுத்துவது சமமற்ற நடவடிக்கையாக இருக்கும் என்பதாலும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ள போதிலும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மெட்டாவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள தொடர் வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT