இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8%; ரிசர்வ் வங்கி கணிப்பையும் தாண்டி புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாகப் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இக்காலாண்டில் 7 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என முன்கூட்டியே கணித்திருந்த நிலையில், மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் அந்த எதிர்பார்ப்புகளைத் தாண்டி மாபெரும் சாதனையைப் படைத்துள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஜிடிபி வளர்ச்சி
நிலையான விலையில் ஜிடிபி மதிப்பின் அசுர வளர்ச்சி
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலையான விலை அடிப்படையிலான உண்மையான ஜிடிபி (Real GDP) ரூ.81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த 2025-26 ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.75.46 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமான உயர்வாகும்.
இதேபோல், நடப்பு விலையிலான பெயரளவு ஜிடிபி (Nominal GDP) ரூ.88.27 லட்சம் கோடியாக உயர்ந்து 10.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
துறைகளின் பங்களிப்பு
சேவை மற்றும் தொழில் துறைகளின் பலமான பங்களிப்பு
நாட்டின் சேவைத் துறை நிலையான விலையில் 10.0 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து பொருளாதார உயர்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
குறிப்பாக நிதி, ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகள் துறை 12.1 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
மேலும், உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளடங்கிய இரண்டாம் நிலைத் துறை 8.6 சதவீத வளர்ச்சியையும், விவசாயம் மற்றும் அதை சார்ந்த முதன்மைத் துறை 2.9 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளன.
முதலீடுகள்
முதலீடுகள் மற்றும் நுகர்வு செலவினங்கள் அதிகரிப்பு
பொருளாதாரத்தின் செலவினப் பக்கத்தைப் பொறுத்தவரை, நாட்டின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 11.9 சதவீத இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 5.8 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தனிநபர் இறுதி நுகர்வு செலவினமும் 7.1 சதவீத சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
அரசின் வலுவான உள்கட்டமைப்பு முதலீடுகளும், நுகர்வோர் தேவைகள் அதிகரிப்புமே இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகப் பயணிப்பதற்கு முதன்மை சான்றாக உள்ளது.