இந்தியாவில் கடந்த மே மாதத்தில் ரூ.1.94 லட்சம் கோடியாக உயர்ந்த ஜிஎஸ்டி வசூல்! பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த மே மாதத்தில் 3.2% அதிகரித்து, சுமார் 1.94 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. வலுவான உள்நாட்டுத் தேவை, உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக இந்த வரி வசூல் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் சாதனை அளவை விட இது சற்றுக் குறைவு என்றாலும், நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த வரி வருவாய் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
ஜிஎஸ்டி வரி வசூல் உயர்வு
மே மாத ஜிஎஸ்டி வரி வசூல்
இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் 3.2 சதவீதம் அதிகரித்து 1.94 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் 1.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்த வரி வசூல், தற்பொழுது நடப்பு மே மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலம் மத்திய ஜிஎஸ்டி தொகையாக ₹37,397 கோடியும், மாநில ஜிஎஸ்டி தொகையாக ₹45,143 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையாக ₹51,990 கோடியும் வசூலாகியுள்ளது.
நிதியாண்டு ஜிஎஸ்டி வருவாய் நிலவரம்
நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் 6.2% வளர்ச்சி
நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், மொத்த ஜிஎஸ்டி வசூல் 6.2% அதிகரித்து 4.37 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூலானது 8.7% உயர்ந்து, வரலாற்றிலேயே இல்லாத அளவாக 2.43 லட்சம் கோடி ரூபாயை எட்டி புதிய சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் 2 லட்சம் கோடி என்ற இலக்கைத் தாண்டிய வரி வசூல், தற்போதைய மே மாதத்தில் சற்றுக் குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கக் காரணங்கள்
உள்நாட்டு நுகர்வுத் தேவை மற்றும் இறக்குமதி வரிகள் மூலம் அதிகரித்த ஜிஎஸ்டி வருவாய்
கடந்த மே மாதத்தில் உற்பத்திப் பொருட்களின் மீதான வரிவிதிப்பு 26.9% உயர்ந்துள்ளதானது, நாட்டின் வலுவான உள்நாட்டு நுகர்வுத் தேவையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. அதேபோல் சேவைத் துறையின் வரிவிதிப்புப் பங்களிப்பு 22.2% அதிகரித்துள்ளதானது, நுகர்வோரின் தொடர்ச்சியான பணப் புழக்கத்தையும் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் காட்டுகிறது. மேலும் இறக்குமதிப் பொருட்கள் மூலமாக வசூலிக்கப்படும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி 19.1% அதிகரித்து 59,654 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதால் நாட்டின் தொழிற்துறை விரிவடைந்துள்ளது உறுதியாகிறது.
ஜிஎஸ்டி ரீஃபண்ட் மற்றும் வரி சீரமைப்பு
ஜிஎஸ்டி ரீஃபண்ட் விபரங்கள் மற்றும் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டதன் பின்னணி
கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி ரீஃபண்ட் எனப்படும் வரித் திருப்பிச் செலுத்துதல் 2.6% அதிகரித்து 27,281 கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த ரீஃபண்ட் தொகைகளைக் கழித்த பிறகு, இந்தியாவின் நிகர ஜிஎஸ்டி வருவாயானது 3.3% உயர்வுடன் சுமார் 1.67 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. கடந்த 2025 செப்டம்பரில் ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொண்ட வரிச் சீரமைப்பு மூலம், 12% மற்றும் 28% வரிகள் குறைக்கப்பட்டது நுகர்வோர் தேவையைத் தூண்ட முக்கியக் காரணமாகும்.