வளைகுடா நாடுகளை முந்திய இந்தியா! கென்யாவின் மிகப்பெரிய பெட்ரோலிய ஏற்றுமதியாளராக உருவெடுத்தது
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச எரிபொருள் வர்த்தக வழித்தடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில், வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைப் (UAE) பின்னுக்குத் தள்ளி, ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்திற்கு மேல் இறக்குமதியை சார்ந்திருந்த போதிலும், தனது சுத்திகரிப்புத் திறனைப் பெருமளவில் உயர்த்தியுள்ளதன் மூலம் இந்த சாதனையை செய்துள்ளது.
ஆப்பிரிக்க சந்தை
ஆப்பிரிக்க சந்தையில் இந்திய எரிபொருட்களின் புதிய சாதனை
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கெப்லர் (Kpler) சர்வதேசப் பொருட்களின் தரவு அமைப்பை மேற்கோள் காட்டி எரிசக்தி நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கென்யாவிற்குத் தேவையான பெட்ரோல், டீசல், ஜெட் ஃபியூயல் மற்றும் எரிபொருள் எண்ணெயை சப்ளை செய்யும் முதன்மை நாடாக இந்தியா மாறியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான இந்தியாவின் பெட்ரோலிய ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் 66 சதவீதம் அதிகரித்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
காரணம்
போர்ச் சூழல் மற்றும் மாற்று வர்த்தக வழித்தடங்கள்
கென்யா நாடு வழக்கமாக தனது எரிபொருள் தேவைகளுக்கு சவுதி அரம்கோ மற்றும் அபுதாபியின் அட்னாக் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களையே நம்பியிருந்தது.
ஆனால் வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோக சிக்கல்களால், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கென்யாவிற்கான பெட்ரோலிய ஏற்றுமதி தினமும் 90,000 பேரல்களிலிருந்து 15,000 பேரல்களாக சரிந்தது.
இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய கென்யா இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது.
இந்தியாவின் குஜராத்தில் உள்ள சிக்கா துறைமுகத்திலிருந்து கோடிக்கணக்கான லிட்டர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சுத்திகரிப்பு மையம்
உலகின் முன்னணி சுத்திகரிப்பு மையமாகத் திகழும் இந்தியா
இந்தியாவில் தற்போது ஆண்டிற்கு 25.8 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்ட 22 ஆலைகள் இயங்கி வருகின்றன.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாகும்.
இத்தகைய பிரம்மாண்ட சுத்திகரிப்புத் திறன் காரணமாகவே, உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தது போக, கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா 6.15 கோடி டன் பெட்ரோலியப் பொருட்களை உலக நாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது.