சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையே, வரலாற்றிலேயே முதல் முறையாக கச்சா எண்ணெய்க்கு இரு நாட்டு நாணயங்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பிரதமர் மோடி, உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, கடந்த ஜூலை 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்குமிடையோன வர்த்தகத்திற்கு, இரு நாடுகளின் சொந்த நாணயங்களையே பயன்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம், இரு நாடுகளிலும் மற்ற நாட்டின் நாணயப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், பரிவர்த்தனைச் செலவும், நேரமும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது சொந்த நாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை இரு நாடுகளும் மேற்கொண்டிருக்கின்றன.
வணிகம்
இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வர்த்தகப் பரிவர்த்தனைகள்:
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் ஆகிய இரண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த வர்த்தகப் பரிவர்த்தனையானது, சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இரண்டாவது வர்த்தகப் பரிவர்த்தனையாகும்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தங்க ஏற்றுமதியாளர் ஒருவர் இந்திய வாடிக்கையாளரிடம் 25 கிலோ தங்கத்தை சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட வர்த்தகப் பரிவர்த்தனையே முதல் பரிவர்த்தனையாகும்.
ஆனால், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கிடையே அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுவது எண்ணெய்ப் பொருட்கள் தான். எனவே, இந்த வர்த்தகப் பரிவர்த்தனை இரு நாட்டு வணிகத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.