IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் ஹரியானா அரசு கணக்குகளில் ₹590 கோடி முறைகேடு; ஊழியர்கள் சஸ்பெண்ட்
செய்தி முன்னோட்டம்
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் சண்டிகர் கிளையில் ஹரியானா அரசுக்கு சொந்தமான கணக்குகளில் சுமார் ₹590 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, இன்று பங்குச்சந்தையில் அந்த வங்கியின் பங்குகள் சுமார் 20% வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஹரியானா அரசுத் துறை ஒன்று தனது கணக்கை மூடிவிட்டு பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற கோரியபோது, வங்கியின் கணக்கு புத்தகத்தில் இருந்த இருப்புக்கும், அரசு துறையின் ஆவணங்களில் இருந்த இருப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், பிப்ரவரி 18 முதல் மேலும் பல அரசுத் துறைகள் இதே போன்ற புகார்களை அளித்தன.
நடவடிக்கை
வங்கி மற்றும் அரசின் அதிரடி நடவடிக்கைகள்
இந்த மோசடியில் தொடர்புடையதாகக் கருதப்படும் 4 வங்கி ஊழியர்களை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த முறைகேட்டை தொடர்ந்து, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் AU Small Finance Bank ஆகியவற்றுடன் எவ்வித அரசு பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளக் கூடாது என ஹரியானா நிதித்துறை தடை விதித்துள்ளது. மேலும், அங்குள்ள பணத்தை உடனடியாக மற்ற வங்கிகளுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்த KPMG நிறுவனம் Forensic Auditor நியமிக்கப்பட்டுள்ளது.
RBI
ரிசர்வ் வங்கி விளக்கம்
இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "இது ஒரு குறிப்பிட்ட கிளையில் நடந்த சம்பவம் மட்டுமே. ஒட்டுமொத்த வங்கித் துறைக்கும் இதனால் எவ்விதப் பாதிப்பும் (Systemic Risk) இல்லை. நிலைமையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார். இந்த மோசடி வங்கியின் நிகர மதிப்பில் (Net worth) சுமார் 1% மற்றும் 2026 நிதியாண்டின் எதிர்பார்க்கப்பட்ட லாபத்தில் 20% வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.