EPFO கணக்கில் இருந்து தானாகவே வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றும் புதிய திட்டம் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
பயன்பாட்டில் இல்லாத பழைய இபிஎஃப்ஓ கணக்குகளில் உள்ள பணத்தை, சந்தாதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்குத் தானாகவே மாற்றும் புதிய வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் நிதியை முறைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஒரு ஊழியர் 55 வயதை எட்டிய பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ விட்டு விலகி, 36 மாதங்களுக்கு மேல் இபிஎஃப்ஓ கணக்கில் எவ்விதப் பங்களிப்பும் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு 'செயல்படாத கணக்காக' வகைப்படுத்தப்படும். இத்தகைய கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, ஒரு சந்தாதாரரின் பழைய கணக்கு விவரங்கள் (ஆதார் போன்றவை) வங்கிக் கணக்குடன் சரியாகப் பொருந்தினால், அந்தத் தொகை தானாகவே மாற்றப்படும்.
EPFO
நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற, சந்தாதாரர்கள் தங்களது யுஏஎன் (UAN) எண்ணுடன் ஆதார், பான் (PAN) மற்றும் வங்கி விவரங்களை இணைத்து கேஒய்சி (KYC) முறையை முழுமையாக முடித்திருக்க வேண்டும். அவ்வாறு விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், ஊழியர்கள் தனியாக விண்ணப்பிக்காமலேயே பழைய நிதி வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இது ஓய்வூதியக் காலத்தில் ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய முழுமையான பலனை உறுதி செய்கிறது. பயனர்கள் தங்களின் பழைய கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகையை அறிய இபிஎஃப்ஓ இணையதளம் அல்லது 'உமாங்' (Umang) செயலி மூலம் சரிபார்க்கலாம். இந்தத் தானியங்கி மாற்ற முறை நடைமுறைக்கு வருவதால், லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் தங்களின் முடங்கிய பணத்தை எவ்வித அலைச்சலும் இன்றித் திரும்பப் பெற முடியும்.