LOADING...
பைஜூ ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
பைஜூ ரவீந்திரன், தற்போது மிக மோசமான சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்

பைஜூ ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2026
09:58 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் ஸ்டார்ட்-அப் உலகின் போஸ்டர் பாயாகக் கொண்டாடப்பட்ட பைஜூ ரவீந்திரன், தற்போது மிக மோசமான சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார். கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் (Byju's) நிறுவனரான இவருக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல், தனது சொத்துக்கள் தொடர்பாகச் சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளைத் தொடர்ந்து மீறியதற்காக (நீதிமன்ற அவமதிப்பு), இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தண்டனை

தண்டனை விவரங்கள்

சிறைத்தண்டனை தவிர, உடனடியாக அதிகாரிகளிடம் சரணடையவும், வழக்கிற்கான செலவுத் தொகையான 90,000 சிங்கப்பூர் டாலர்களை (சுமார் 58 லட்சம் ரூபாய்) செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 'பீயார் இன்வெஸ்ட்கோ' என்ற நிறுவனத்தில் தனக்கு இருக்கும் சட்டப்பூர்வ உரிமைகளுக்கான ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பைஜூ ரவீந்திரன் சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு நாட்டில் இருக்கிறாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வழக்கு

கத்தாரைச் சேர்ந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு

பைஜூஸ் நிறுவனம் உச்சத்தில் இருந்தபோது உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்த்தது. இந்தச் சிங்கப்பூர் நீதிமன்ற வழக்கை, கத்தார் நாட்டின் இறையாண்மை நிதி அமைப்பான 'கத்தார் முதலீட்டு வாரியத்தின்' துணை நிறுவனம் ஒன்று தொடர்ந்திருந்தது. பைஜூஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி, ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த கத்தார் நிறுவனம் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வீழ்ச்சி

பில்லியனரில் இருந்து நீதிமன்றக் கூண்டு வரை: பைஜூஸின் வீழ்ச்சிப் பாதை

'Think & Learn Pvt Ltd' என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் 'பைஜூஸ்' என உருவெடுத்த இந்த நிறுவனம், கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கல்வி மூலம் அசுர வளர்ச்சி அடைந்தது. உலகிலேயே மிக அதிக மதிப்புடைய எட்டெக் நிறுவனமாக மாறியதுடன், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராகவும் ஜொலித்தது. ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது பைஜுஸ் அமெரிக்காவில் மட்டும் லெண்டர்களிடம் வாங்கிய $1.2 பில்லியன் (சுமார் 10,000 கோடி ரூபாய்) கடனைத் திரும்பப் பெற அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிதிநிலை அறிக்கைகளைத் தாமதமாகத் தாக்கல் செய்தது, முதலீட்டாளர்களுடன் ஏற்பட்ட கடுமையான மோதல்கள் மற்றும் சட்டப் போராட்டங்களில் நிறுவனம் சிக்கியுள்ளது.

Advertisement