LOADING...
8வது ஊதியக் குழு: புதிய ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்? முழு விவரங்கள்
8வது ஊதியக் குழுவின் புதிய ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த விவரங்கள்

8வது ஊதியக் குழு: புதிய ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்? முழு விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2026
01:56 pm

செய்தி முன்னோட்டம்

7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2025 டிசம்பர் 31 உடன் முடிவடைந்துள்ளது. எனவே, 8வது ஊதியக் குழுவின் புதிய ஊதிய விகிதங்கள் ஜனவரி 1, 2026 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கான குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசு 18 மாத கால அவகாசம் அளித்துள்ளது. குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரசாங்கம் புதிய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், நிலுவைத் தொகை 2026 ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். உதாரணமாக, 2026 இன் பிற்பகுதியில் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் கிடைத்தாலும், ஜனவரி முதல் அந்தத் தேதி வரையிலான நிலுவைத் தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் மொத்தமாக வரவு வைக்கப்படும்.

ஊதிய உயர்வு

எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு எவ்வளவு?

கடந்த கால புள்ளிவிவரங்களின்படி, 8வது ஊதியக் குழுவில் ஊழியர்களுக்கு 20% முதல் 35% வரை ஊதிய உயர்வு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் 6வது ஊதியக் குழுவில் சுமார் 40% உயர்வு வழங்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவில் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் மூலம் 23% வரை உயர்வு இருந்தது. தற்போது 8வது ஊதியக் குழுவிற்கு 2.4 முதல் 3.0 வரையிலான ஃபிட்மென்ட் ஃபேக்டர் பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது.

இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆலோசனை

8வது ஊதியக் குழுவிற்கெனத் தனி அதிகாரப்பூர்வ இணையதளத்தை அரசு தொடங்கியுள்ளது. இதில் ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம். இதற்கான கடைசித் தேதி மார்ச் 16, 2026 ஆகும். இந்த நடைமுறைகள் முடிந்து இறுதி அறிக்கை தயாராக இன்னும் சில மாதங்கள் எடுக்கும். இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்களைக் குறிவைத்து ஒரு புதிய சைபர் மோசடி பரவி வருகிறது. "உங்கள் புதிய சம்பளத்தைக் கணக்கிட இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள்" என வாட்ஸ்அப்பில் வரும் லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம். இது உங்கள் செல்போனை ஹேக் செய்து வங்கித் தகவல்களைத் திருடும் முயற்சியாகும். எப்போதுமே அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்புங்கள்.

Advertisement