LOADING...
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வாய்ப்பில்லையா? பின்னணி விவரம்
8வது ஊதியக்குழு கோரிக்கைகளில் அரசுக்கு உள்ள சவால்கள்

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வாய்ப்பில்லையா? பின்னணி விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
May 25, 2026
08:32 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த 8வது ஊதியக்குழுவிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், நிதி நெருக்கடி காரணமாக அரசு அனைத்தையும் ஏற்க வாய்ப்பில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர். அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது, குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவது போன்ற கோரிக்கைகள் பணவீக்க காலத்திற்கு அவசியமானவை என்று ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றன. ஆனால், இந்த ஊதிய திருத்தம் என்பது வெறும் சம்பள உயர்வு சார்ந்தது மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார சமநிலையைப் பாதிக்கும் காரணியாகவும் அரசு தரப்பால் பார்க்கப்படுகிறது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் சவால்

3.83 ஃபிட்மென்ட் ஃபாக்டர் கோரிக்கையை அரசு முழுமையாக ஏற்பதில் நீடிக்கும் சிக்கல்கள்

ஊதியக்குழு பரிந்துரையில் சம்பள உயர்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியான ஃபிட்மென்ட் ஃபாக்டரை (Fitment Factor) 3.83 ஆக உயர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது. இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டர் விகிதம் அதிகரிக்கும் போது அடிப்படை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் இதர படிகள் அனைத்தும் பல மடங்கு உயர்ந்து அரசுக்கு நீண்டகால நிதிப் பொறுப்புகளை ஏற்படுத்தும். மத்திய அரசு ஊழியர்களைத் தாண்டி ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் மாநில அரசுகளின் நிதிநிலை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டே மத்திய அரசு இதில் ஒரு நடுத்தர முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.

குடும்ப நுகர்வு ஃபார்முலா

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3லிருந்து 5 ஆக உயர்த்தக் கோரும் புதிய ஃபார்முலா

தற்போதைய காலகட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் குடும்ப உறுப்பினர்களின் ஃபார்முலாவை 3லிருந்து 5 ஆக உயர்த்த வேண்டும் என யூனியன்கள் வலியுறுத்துகின்றன. பழைய காலத்து கணக்கீடுகள் தற்போதைய சமூக நிலைக்குப் பொருந்தாது என்றும், இன்றைய ஊழியர்கள் தங்களது மனைவி, குழந்தைகளுடன் வயதான பெற்றோரையும் பராமரிக்க வேண்டியுள்ளது என்றும் சங்கங்கள் கூறுகின்றன. மருத்துவம், கல்வி மற்றும் வீட்டு வாடகை போன்ற அத்தியாவசிய செலவுகள் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், இந்த 5 குடும்ப உறுப்பினர்கள் ஃபார்முலா மிக அவசியமானது என தொழிற்சங்கத் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

Advertisement

ஓய்வூதியத் திட்ட சர்ச்சை

பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் யுபிஎஸ் (UPS) திட்டங்களில் உள்ள நடைமுறைச் சவால்கள்

தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) முழுமையாக ரத்து செய்துவிட்டு, 50 சதவீத இறுதிச் சம்பளத்தை உத்தரவாதமாகத் தரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும் என்பதில் ஊழியர்கள் உறுதியாக உள்ளனர். பல ஆண்டுகளாகப் பங்களிப்புத் தொகை செலுத்தப்பட்டு நிதித்துறையோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள என்பிஎஸ் (NPS) முறையைத் தற்பொழுது முழுமையாகக் கலைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு தனது பங்களிப்பை 18.5% ஆக உயர்த்திய நிலையிலும், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற முழுப் பாதுகாப்பைக் கோரி பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

Advertisement