காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியது சாம்சங் தொழிலாளர் சங்கம்
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் தொழிலாளர்கள் சங்கம் சிறந்த ஊதியம் மற்றும் நன்மைகளை கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது. இந்த சங்கத்தின் சுமார் 30,000 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் சங்கம்(NSEU) நடத்திய மூன்று நாள் பொது வேலைநிறுத்தத்தின் கடைசி நாளான இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் விருப்பம் காட்டாததால், இந்த முடிவை எடுத்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் NSEU, தங்களது வேலைநிறுத்தம் உற்பத்தியை பாதித்துள்ளதாக தெரிவித்தது. ஆனால், அதை சாம்சங் மறுத்துள்ளது.
6,500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக தகவல்
"சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நிறுவனம் தயாராக உள்ளது" என்று சாம்சங் தெரிவித்துள்ளது. ஆனால், "முதல் பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகும் பேச்சுவார்த்தையில் ஈடுபட நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை. எனவே ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி காலவரையின்றி நடைபெறும் இரண்டாவது பொது வேலைநிறுத்தத்தை நாங்கள் அறிவிக்கிறோம்." என்று தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை 6,500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற உறுப்பினர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று NSEU அழைப்பு விடுத்துள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 3,000 பேர் கலந்துகொண்டனர். சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் செய்தித் தொடர்பாளர், எத்தனை தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.