பேட்டரி லைஃப் சைக்கிள் ரகசியம்: எலக்ட்ரிக் வாகன ஆயுளைப் பல மடங்கு நீட்டிக்கும் 80-20 விதிமுறை
செய்தி முன்னோட்டம்
ஒரு எலக்ட்ரிக் வாகன பேட்டரியின் சைக்கிள் (சுழற்சி - Cycle) என்பது, அதன் மொத்தக் கொள்ளளவில் 100% ஆற்றலை நீங்கள் முழுமையாக பயன்படுத்தித் தீர்ப்பதாகும். இந்த 100% ஆற்றலை நீங்கள் ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நீங்கள் 100% முழுமையாக சார்ஜ் செய்து 50% சார்ஜ் பயன்படுத்தி, நாளை மீண்டும் மிச்சமுள்ள 50% சார்ஜ் பயன்படுத்தினால், இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தம் 100% ஆற்றல் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுதான் கணக்கில் ஒரே ஒரு முழு சைக்கிளாகக் கருதப்படும்.
80% சார்ஜ்
80% சார்ஜ் பயன்பாடும் சைக்கிள் கணக்கும்
உதாரணமாக, உங்கள் இவி பேட்டரி 1000 சைக்கிள்கள் உழைக்கும் திறன் கொண்டது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வண்டியை 80% சார்ஜ் செய்து, அதை முழுமையாகப் பயன்படுத்தி (0% வரை) மீண்டும் சார்ஜ் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் 1,000 முறை இவ்வாறு செய்யும்போது உங்கள் பேட்டரி திறன் குறையத் தொடங்கும். ஆனால் சைக்கிள் முழுமையாக கழியாது. நீங்கள் எப்போது 100% ஆற்றலை ஒட்டுமொத்தமாக வெளியேற்றுகிறீர்களோ, அப்போதுதான் அந்தப் பேட்டரியின் மொத்த ஆயுட்கால சைக்கிள் எண்ணிக்கையில் இருந்து ஒரு சைக்கிள் கழியும்.
80-20 விதிமுறை
80-20% விதிமுறை ஏன் இவ்வளவு முக்கியம்?
லித்தியம்-அயன் பேட்டரிகள் எப்போதும் 20% முதல் 80% வரையிலான சார்ஜ் அளவில் இருக்கும்போது மிக ஆரோக்கியமாக செயல்படும். பேட்டரி 0% நெருங்கும்போதும், 100% முழுமையாக நிரம்பும்போதும் பேட்டரிக்குள் உள்ள வேதிப்பொருட்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த அதிகப்படியான அழுத்தம் தான் பேட்டரியின் நீண்டகால ஆயுளைக் குறைக்கிறது. நாம் பேட்டரியை 80% உடன் சார்ஜிங்கை நிறுத்திவிட்டு, 20% அளவிற்கு குறையும் சமயத்திலேயே மீண்டும் சார்ஜ் போடும்போது, பேட்டரி அந்த அழுத்த மண்டலத்திற்குள் நுழையாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆயுள் நீட்டிப்பிற்கான காரணம்
ஏன் 80-20% முறை பேட்டரி ஆயுளை நீட்டிக்கிறது?
பேட்டரியை முழுமையாகப் பயன்படுத்தினால் (100% to 0%), பேட்டரி 1000 சைக்கிள்கள் மட்டுமே உழைக்கும் என்றால், அதே பேட்டரியை 80-20% என்ற பாதுகாப்பு எல்லைக்குள் வைத்துப் பராமரித்தால், அது 1500 முதல் 2000 சைக்கிள்கள் வரை உழைக்கும். அதாவது, நீங்கள் பேட்டரியை 100% பயன்படுத்தும் சைக்கிள்களின் எண்ணிக்கையைக் குறைக்காமல், பேட்டரியின் ஒட்டுமொத்த வாழ்நாளை அதிகரிக்கிறீர்கள். சுருக்கமாக சொன்னால், 100% சார்ஜ் செய்வது ரப்பரை முழுமையாக இழுத்து விடுவது போன்றது. 80% சார்ஜ் செய்வது அதை மிதமாக பயன்படுத்துவது போன்றது. மிதமான பயன்பாடு எப்போதுமே ஆயுளைத் தரும்.
எப்படி பின்பற்றுவது?
தினசரி பயன்பாட்டில் 80-20% முறையை எப்படிப் பின்பற்றுவது?
உங்கள் வாகனம் 20% சார்ஜ் நிலையை அடைையும்போதே சார்ஜ் போடத் தொடங்குங்கள். வாகனம் 80% அல்லது 90% சார்ஜ் ஆனவுடன் சார்ஜரை கழற்றி விடுங்கள். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்கள் மட்டும், கிளம்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக 100% சார்ஜ் செய்துகொள்ளலாம். தினமும் 100% சார்ஜ் செய்வதைத் தவிர்ப்பது மட்டுமே, உங்கள் பேட்டரியின் சைக்கிள் ஆயுளை அதிகரிக்கப் போதுமானது. இது உங்கள் வண்டியின் பேட்டரியை பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மிகச்சிறந்த வழி.
பரிந்துரை
நிபுணர்கள் பரிந்துரைக்கும் தொழில்நுட்பத் தீர்வு
எலக்ட்ரிக் வாகனங்களின் இதயமாகக் கருதப்படும் பேட்டரியைப் பராமரிக்க சிக்கலான தொழில்நுட்ப நுணுக்கங்கள் தேவையில்லை. மாறாக, எளிய 80-20% விதிமுறையே போதுமானது என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பேட்டரியின் மீது தேவையற்ற மின் அழுத்தத்தைக் கொடுக்காமல், மிதமான சார்ஜிங் எல்லையை பின்பற்றுவது பேட்டரி மாற்றத்திற்கான கூடுதல் செலவைக் குறைப்பதுடன், எதிர்காலத்தில் வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.