தமிழக மின்சார வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: 100% சாலை வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வழங்கப்பட்டு வந்த 100 சதவீத சாலை வரி விலக்கு சலுகையை, 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு சலுகை இன்றுடன் (டிசம்பர் 31, 2025) முடிவடைய இருந்தது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் ஆர்வம் மற்றும் வாகன உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை இச்சலுகை நீட்டிக்கப்படுவதாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#TamilNadu has extended 100% motor vehicle tax exemption for all electric vehicles till 31 December 2027 aligning with our deep rooted sustainability focus !
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 30, 2025
This decision by Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal reinforces our commitment to support EV adoption,… pic.twitter.com/3fY2CUsuF6
விவரங்கள்
வரி விலக்கு குறித்த விவரங்கள்
இந்த வரி விலக்கு சலுகையானது பின்வரும் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்: தனிநபர் வாகனங்கள்: மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள். போக்குவரத்து வாகனங்கள்: மின்சார ஆட்டோக்கள், டாக்ஸிகள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள். தமிழகத்தில் 2025-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு சுமார் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 'தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023'-ன் இலக்குகளை எட்டவும், வாகன வாங்குவோரின் ஆரம்பக்கட்டச் சுமையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை வரி முழுமையாக விலக்கப்படுவதன் மூலம், ஒரு மின்சார கார் வாங்குபவருக்கு அதன் விலையைப் பொறுத்து பல ஆயிரம் முதல் லட்சங்கள் வரை சேமிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.