இந்தியாவில் வெளியானது டாடா ஆல்ட்ராஸின் CNG வெர்ஷன்!
ஆல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலின் CNG வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். மேலும், ஆறு வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது இந்த புதிய டாடா ஆல்ட்ராஸ் iCNG ஹேட்ச்பேக். இந்த புதிய CNG மாடலின் தங்களுடை ட்வின்-சிலிண்டர் CNG டேங்க் செட்டப்பை பயன்படுத்தியிருக்கிறது டாடா. இதன் மூலம், மொத்த பூட் ஸ்பேஸையும் CNG டேங்க்கே எடுத்துக் கொள்ளாமல், நமக்கும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. ஸ்டாண்டர்டு வேரியன்டில் 345 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கும் ஆல்ட்ராஸின் CNG வெர்ஷன் 210 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மாருதி சுஸூகி பெலினோ CNG மற்றும் டொயோட்டா கிளான்ஸா CNG ஆகிய கார்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது இந்த ஆல்ட்ராஸ் iCNG ஹேட்ச்பேக்.
இன்ஜின், வசதிகள் மற்றும் விலை:
டெய்ல்கேட்டில் இருக்கும் iCNG என்ற பேட்ஜைச் தவிர ஸ்டாண்டர்டான வெர்ஷனுக்கும், CNG வெர்ஷனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், பெட்ரோல் மோடில் 88hp பவர் மற்றும் 115Nm டார்க்கையும், CNG மோடில் 77hp பவர் மற்றும் 103Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது. இதன் போட்டியாளர்களான பெலினோ மற்றும் கிளான்ஸாவின் CNG வெர்ஷன்களும் கிட்டத்தட்ட இதே பவரையே உற்பத்தி செய்தாலும் 98.5Nm என இதனைவிட குறைவான டார்க்கையே உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் இதன் அடிப்படை வேரியன்டான XE ரூ.7.55 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப் வேரியன்டான XZ+ O (S) ரூ.10.55 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.