1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! மின்வாகனக் கொள்கை 2023-ஐ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று )பிப்.14) வெளியிட்டார். மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள், மின்வாகன உற்பத்தியிலும், தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனை தக்க வைத்து, மேம்படுத்திடவும், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப மின்வாகன உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளும் வகையிலும், தற்போதைய கொள்கையில் சில மாற்றங்களும் தேவைப்படுகிறது. மின் வாகனத்துறையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளனர். பொது போக்குவரத்து திட்டங்களை மின்மயமாக்குதல், அடுத்து ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டங்களை ஊக்குவித்தல், மின் வாகன நகரங்கள் உருவாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரி திரும்ப வழங்குதல், ஆகியவை அடங்கும்.
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023; முதல்வர் வெளியிட்ட அறிக்கை என்ன?
மின் நிலையங்களுக்கு சிறப்பு சலுகையாக சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 31.12.2025 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், புதிய கட்டடங்கள், ஏற்கனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு ஆகியவற்றுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட மின்சார வாகன மின்னேற்று உள்கட்டமைப்புக்கான வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும், மின் வாகன தொழிற் பூங்காக்கள் அமைத்தல், மின்வாகன இணையதளம் உருவாக்குதல், சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக குழுவை அமைத்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.