Loading...
பெட்ரோல் பங்குகளில் எத்தனால் அளவு விவரம் கேட்கும் வழக்கிற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு
பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது

பெட்ரோல் பங்குகளில் எத்தனால் அளவு விவரம் கேட்கும் வழக்கிற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

பெட்ரோல் பங்குகளில் விநியோகிக்கப்படும் பெட்ரோலில் எவ்வளவு சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஒவ்வொரு விநியோகக் குழாயிலும் கட்டாயமாக அச்சிடக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வாராலே ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32-ன் கீழ் இந்த மனுவை நேரடியாக விசாரிக்க முடியாது என்றும், மனுதாரர் நரேந்திர குமார் கோஸ்வாமி உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

மனுதாரரின் வாதம்

"எனக்குத் தெரிந்துகொள்ள உரிமை உள்ளது"

மனுதாரர் நரேந்திர குமார் கோஸ்வாமி தான் மத்திய அரசின் எத்தனால் கொள்கையை எதிர்க்கவில்லை என்றும், எரிபொருளின் மூலப்பொருள்களை தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்றும் வாதாடினார்.

"நாம் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினால் கூட அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்று எழுதப்பட்டுள்ளது. அதேபோல் E20 எரிபொருள் வாங்கும்போது அதன் விவரம் பில் மற்றும் பெட்ரோல் பம்புகளில் குறிப்பிடப்பட வேண்டும்."

"ஒவ்வொரு ரக வாகனங்கள், அவற்றின் தயாரிப்பு ஆண்டு மற்றும் என்ஜின் அடிப்படையில் E20 எரிபொருள் எதற்கு பொருந்தும் என்ற அதிகாரப்பூர்வத் தகவலை அரசு வெளியிட வேண்டும்".

"E20 பயன்பாட்டினால் வாகனத்தின் மைலேஜ், என்ஜின் ஆயுட்காலம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் குறித்து ஆய்வு செய்யச் சுதந்திரமான வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும்".

அரசின் விளக்கம்

E20 பெட்ரோல் குறித்த கவலைகள்

அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் (AG) ஆர்.வெங்கடரமணி, எத்தனால் கொள்கை தொடர்பான முந்தைய மனுக்களை நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த மனுவிற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் எத்தனால் பயன்பாட்டால் அரிப்பு மற்றும் என்ஜின் கோளாறு ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2023-க்கு பின் வரும் அனைத்து புதிய வாகனங்களும் E20 பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகின்றன என அரசு தெரிவித்துள்ளது.

"மைலேஜ் குறைவதற்கு எத்தனால் மட்டுமே காரணம் அல்ல; ஓட்டும் முறை, போக்குவரத்து, பராமரிப்பு, டயர் வேகம் மற்றும் AC பயன்பாடும் காரணமாகும்."

ADVERTISEMENT