குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 1
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம். வாகனஓட்டிகளுக்கு மிகவும் சோதனையான விஷயம் இந்த பனிமூட்டம் தான். எதிர்வரும் வாகனங்களோ, ரோடுகளோ, சரிவர தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிறைந்துள்ளது. இதனால் பல விபத்துகள் நேர்கிறது. குறிப்பாக இந்தியாவின் பல தென் மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பாதுகாப்பாக எப்படி வாகனத்தை ஓட்டுவது என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ:
மூடுபனி விளக்கு
தற்போது வரும் அனைத்து வாகனங்களிலும், மூடுபனி விளக்குகள் இருபக்கமும் கண்டிப்பாக பொருத்தப்பட்டிருக்கும். இது போன்ற பனிமூட்டமான சூழ்நிலைகளில் பயன்படுத்தவே இந்த அமைப்பு தரப்பட்டுள்ளது. காரின் முன் மற்றும் பின்பக்க பம்பர்களின் கீழ் பகுதியில் இந்த விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். இந்த மூடுபனி விளக்குகள், சுற்றுப்புறத்தின் மூடுபனிக்கு ஊடே, பிரகாசமான ஒளியை பாய்ச்சி, முன்னே இருக்கும் பாதையை காண்பிக்கும்.
நிதானமான வேகத்தில் ஓட்டவும்
சாலைகளில் பனிமூட்டம் நிலவி வரும் சூழலில், எப்போதும் போல வாகனத்தை வேகமாக ஓட்டாதீர்கள். பனிமூட்டத்தினால் சாலைகள் ஈரமாக இருக்கக்கூடும் என்ற காரணத்தையும் தாண்டி, பனிமூட்டமான நிலையில் எதிர்வரும் வாகனமும் தெரியாது, மேடுபள்ளமும் தெரியாது. அதனால், வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். உங்கள் பயண நேரம் சற்று அதிகரிக்கக்கூடும் என்றாலும், உயிர் சேதத்தையும், ஆபத்தையும் தவிர்க்கலாம்.