
அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி; ராயல் என்ஃபீல்ட் நிர்வாக இயக்குனர் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், அவற்றின் என்ஜின் திறன் எதுவாக இருந்தாலும், ஒரே மாதிரியான 18% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த்த லால் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் இரு சக்கர வாகனங்களுக்கான வரி விகிதத்தை மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், சித்தார்த்த லால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஒருவேளை இந்தத் திருத்தப்பட்ட வரி விதிப்பு முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 350 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஆனால், 350 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்கள் ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்பட்டு, 40% ஜிஎஸ்டி விதிக்கப்படலாம்.
அறிவிப்பு
வரி திருத்த அறிவிப்பு
இந்த வரித் திருத்தம் குறித்த முடிவு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 350-500 சிசி பிரிவில் முன்னணியில் உள்ளது. இந்த வரி மாற்றம் நிறுவனத்தின் விற்பனையைப் பெரிதும் பாதிக்கக்கூடும் என சித்தார்த்த லால் கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டில், ராயல் என்பீல்ட் உள்நாட்டுச் சந்தையில் 8.57 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. சிறிய ரக பைக்குகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பது நல்லது. ஆனால் 350 சிசிக்கு மேல் உள்ள பைக்குகளுக்கு வரி விதிப்பை அதிகரிப்பது இந்தியாவின் உலகளாவிய சந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் சித்தார்த்த லால் எச்சரித்துள்ளார்.