இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸின் புதிய AMG SL 55 ரோட்ஸ்டர்
புதிய 'AMG SL 55' மாடல் ரோட்ஸ்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ் நிறுவனம். 2+2 சீட்டிங் கான்ஃபிகரேஷன் மற்றும் ஃபேப்ரிக் ரூஃபுடன் இந்தியாவில் வெளியிகியிருக்கிறது இந்த புதிய ரோட்ஸ்டர். மெர்சிடீஸின் சர்வதேச லைன்-அப்பில் விற்பனையாகி வந்த S-கிளாஸ் கேப்ரியோலெட், AMG GT ரோட்ஸ்டர் மற்றும் ஆறாம் தலைமுறை SL ஆகிய மாடல்களுக்கு மாற்றாக இந்த 'SL 55' மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ். இந்த ஏழாம் தலைமுறை SL மாடலில் மூன்றடுக்கு ஃபேப்ரிக் ரூஃபை பயன்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ். இது முந்தைய தலைமுறையில் பயன்படுத்தப்பட்ட மெட்டல் ரூஃபை விட 21 கிலோ எடை குறைவானது. இந்த ரூஃபை சென்டர் கன்சோல் அல்லது இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே மூலம் இயக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மெர்சிடீஸ் AMG SL 55: இன்ஜின் மற்றும் விலை
இந்த புதிய SL 55-ல், 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் கூடிய, 476hp பவர் மற்றும் 700Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 4.0 லிட்டர், ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸானது மெர்சிடீஸின் 4மேட்டிக்+ சிஸ்டத்தின் மூலம் அனைத்து வீல்களுக்கு பவரை அனுப்பும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த SL 55-ல் ரியர் ஆக்ஸில் ஸ்டீயரிங் வசதி ஸ்டாண்டர்டாகவே வழங்கப்பட்டிருக்கிறது. 295 கிமீ டாப் ஸ்பீடு கொண்ட இந்த புதிய ரோட்ஸ்டரானது 0-100 கிமீ வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிப்பிடிக்கும் திறனுடன் இருக்கிறது. இந்தியாவில் ரூ.2.35 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கும் இந்த SL 55 ரோட்ஸ்டரை, CBU முறையில் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யவிருக்கிறது மெர்சிடீஸ்