இந்தியாவில் டாடா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்கள்
உலகளவில் பல்வேறு முன்னணி நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் இந்திய நிறுவங்களில் முன்னணியில் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். டாடாவைத் தவிர பிற இந்தியா வாகனத் தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முழுமையாகக் கால்பதிக்கவில்லை. எரிபொருள் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்புச் செலவு அதிகம், எனவே ப்ரீமியமான விலையிலேயே எலெக்ட்ரிக் கார்கள் உலகமெங்கும் அறிமுகமாகின்றன. ஆனால், இந்தியாவிற்கு ஏற்ப சற்று குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது டாடா. அடுத்து என்னென்ன எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது டாடா?
டாடா பன்ச் EV:
குறைந்த விலையில் வெளியாகி டாடாவின் சிறந்த மாடல் எனப் பெயரெடுத்திருக்கும் டாடா பன்ச் எரிபொருள் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது டாடா. 300 முதல் 350 கிமீ வரையிலான ரேஞ்சுடன், டாடாவின் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டு இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹேரியர் EV: சில நாட்களுக்கு முன்பு டாடா அறிமுகப்படுத்திய ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவிக்களில் ஒன்றான ஹேரியர் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. 60kWh பேட்டரி மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன், டாடாவின் ஒமேகா ஆர்க் பிளாட்ஃபார்மில் இந்தப் புதிய ஹேரியர் EV மாடலை டாடா நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
டாடா சஃபாரி EV:
இந்தியாவில் டாடா விற்பனை செய்து வரும் முக்கியமான எரிபொருள் எஸ்யூவி மாடல் சஃபாரி. இந்த மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது டாடா. இந்த மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஒன்றையும் டாடா உருவாக்கி வருகிறது. ஹேரியர் EV-யைப் போலவே, 60kWh பேட்டரி மற்றும் இரண்டு மோட்டார்கள் செட்டப்புடன் இந்த சஃபாரி EV-யை உருவாக்கி வருகிறது டாடா. டாடா கர்வ் EV: டாடாவின் இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் வாகனக் கட்டுமானத்தில் இந்த கர்வ் EV-யை உருவாக்கி வருகிறது டாடா. 400-500கிமீ வரை ரேஞ்சைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த எலெக்ட்ரிக் காரானது 2024 இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சியரா EV:
சியரா EV-யை இன்னும் கான்செப்ட் மாடலாகவே வைத்திருக்கிறது டாடா. 2025ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தக் காரின் தயாரிப்பு வடிவத்தை டாடா அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேரியர் EV மற்றும் சஃபாரி EV மாடல்களின் பயன்படுத்தவிருக்கும் பவர்ட்ரெயினையே இந்த சியரா EV-யிலும் அந்நிறுவனம் பயன்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் டாடா EV-க்கள்: தற்போது டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான ஆகிய மூன்று மாடல் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டாடா. இவற்றுள் நெக்ஸான EV-யில் ப்ரைம் மற்றும் மேக்ஸ் என கூடுதலாக இரண்டு மாடல்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா. இந்தியாவில் ரூ.8.49 லட்சம் முதல் ரூ.14.99 லட்சம் வரையிலான விலைகளில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது டாடா.