உங்கள் காரை இனி விருப்பம்போல் மாற்றலாம்; மினி இந்தியா மாட் மை மினி கஸ்டமைசேஷன் திட்டம் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
இந்திய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன சந்தையில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள மினி இந்தியா நிறுவனம், மாட் மை மினி (Mod My MINI) என்ற புதிய கஸ்டமைசேஷன் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மினி கூப்பர் மற்றும் கன்ட்ரிமேன் கார் உரிமையாளர்கள், தங்களது கார்களுக்கு தொழிற்சாலை பாகங்கள் மூலமாகவே தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்க முடியும். புதிய கார்கள் மட்டுமின்றி, ஏற்கனவே மினி கார்களை வைத்துள்ள உரிமையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிசைன்
2.5 மில்லியன் டிசைன் சேர்க்கைகள் மற்றும் நிறங்கள்
காரின் கூரை, சைடு மிரர் கேப்கள், ஸ்பாய்லர்கள் மற்றும் பிரேக் கேலிப்பர்கள் போன்ற வெளிப்புறப் பகுதிகளை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கலாம்.
இதில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய மினி வண்ணங்கள், கருப்பொருள் சார்ந்த ஸ்டிக்கர்கள் மற்றும் அசல் மினி பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவைகளின் கலவை மூலம் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான டிசைன் சேர்க்கைகளை உருவாக்க முடியும் என நிறுவனம் தெரிவிடைத்துள்ளது.
மூன்றாம் தரப்பு நிறுவனங்களை நம்பியிருக்காமல், மினி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பாகங்கள் மூலமே தரமான மாற்றங்களைச் செய்ய இத்திட்டம் உதவுகிறது.
வாரண்டி
24 மாத வாரண்டி மற்றும் விலை விவரங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் அனைத்து அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர்களுக்கும் பொருத்தப்பட்ட தேதியிலிருந்து 24 மாதங்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.
இதனால் காரின் வெளிப்புறத் தோற்றத்தின் ஆயுள் குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பாகங்கள் மற்றும் வண்ணங்களைப் பொறுத்தே இதன் கட்டணம் மாறுபடும் என்பதால், நிலையான தொகுப்பு விலை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள மினி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமை அணுகி தங்களது கார்களை கஸ்டமைஸ் செய்யத் தொடங்கலாம்.
பிஎம்டபிள்யூ
'உண்மையான சொகுசு என்பது தேர்வு செய்யும் சுதந்திரமே' - பிஎம்டபிள்யூ
மினி கார் வெறும் போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, அது உரிமையாளரின் தனிப்பட்ட பாணியை வெளிப்படுத்தும் அடையாளம் என்று பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவர் ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்துள்ளார்.
சாலையில் செல்லும் இரண்டு மினி கார்கள் ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்த வடிவமைப்பு உரிமையை வாடிக்கையாளர்களிடமே நேரடியாக வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சிறிய மாற்றங்கள் காருக்குப் பெரிய ஆளுமையைத் தருவதோடு, விரல் ரேகையைப் போல ஒவ்வொரு காரையும் முற்றிலும் தனித்துவமானதாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.