எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை ஒருங்கிணைக்க மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், செயல்பாட்டில் உள்ள அனைத்து மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களிலும் நிகழ்நேரத் தரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்க முன்மொழிந்துள்ளது.
இந்த முயற்சியானது எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கான சார்ஜிங் செயல்முறையை சீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்தோஷ் ஐயர், அத்தகைய தளம் வாடிக்கையாளர் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும் மற்றும் இந்தியாவில் மின்சார வாகனங்களை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை ஜனநாயகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐயர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் வெவ்வேறு சார்ஜிங் சேவைகளை அணுக பல செயலிகளை பயன்படுத்தும் நிலை உள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.
யுபிஐ
யுபிஐ போன்ற ஒருங்கிணைந்த இயங்குதளம்
யுபிஐ அடிப்படையிலான அமைப்பைப் போன்ற ஒரு ஒருங்கிணைந்த இயங்குதளம் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம் மற்றும் பயனர் வசதியை மேம்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருக்கும் போது, நாட்டின் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் துறை இன்னும் பல செயலிகளை நம்பியுள்ளது என்று சந்தோஷ் ஐயர் சுட்டிக்காட்டினார்.
இந்த செயலிகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளாது மற்றும் சீரற்ற கட்டண நுழைவாயில்களைக் கொண்டுள்ளன என்றும், இந்த சிக்கலை தீர்க்க முடிந்தால் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக நகரும் என அவர் மேலும் கூறினார்.
இதற்காக அனைத்து செயலிகளையும் உள்ளடக்கிய ஒரு தளத்தை உருவாக்க இந்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.