இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ் பென்ஸ் இரண்டாம் தலைமுறை GLC
இந்தியாவில் தங்களது இரண்டாம் தலைமுறை GLC மாடலை, இரண்டு வேரியன்ட்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஒரு வேரியன்டையும், டீசல் இன்ஜின் கொண்ட ஒரு வேரியன்டையும் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ். தற்போது இந்தியாவில் வெளியாகியிருக்கும் இந்த இரண்டாம் தலைமுறை GLC மாடலை கடந்த ஆண்டு ஜூன் மாதமே, சர்வதேச சந்தையில் வெளியிட்டுவிட்டது மெர்சிடீஸ். இந்த இரண்டாம் தலைமுறை GLC-க்கு, புதிய C-கிளாஸை ஒத்த டிசைனைக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். காரின் உள்ளே, மேபாக் S-கிளாஸைப் போலவே இருக்கும் டேஷ்போர்டு, 11.9 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர் ஆகிய மாற்றங்களைச் செய்திருக்கிறது மெர்சிடீஸ். பிஎம்டபிள்யூX3, ஆடி Q5, வால்வோ XC60 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக புதிய காரை வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்.
மெர்சிடீஸ் பென்ஸ் இரண்டாம் தலைமுறை GLC: இன்ஜின் மற்றும் விலை
GLC 300 வேரியன்டானது, 258hp பவர் மற்றும் 400Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெற்றிருக்கிறது. மற்றொரு வேரியன்டான GLC 220d-யானது, 197hp பவர் மற்றும் 440Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இரண்டு வேரியன்டகளிலும், 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 4 மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 48V மைல்ட்-ஹைபிரிட் சிஸ்டம் ஆகியவற்றை ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது மெர்சிடீஸ். பாதுகாப்பிற்காக ஏழு ஏர்பேக்குகள், ADAS தொழில்நுட்பம் மற்றும் பிளைண்டு ஸ்பாட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இரண்டாம் தலைமுறை GLC 300 வேரியன்டை ரூ.73.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், GLC 220d வேரியன்டை ரூ.74.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்.