
புதிய தொழிற்சாலை.. ரூ.24,000 கோடி முதலீடு.. மாருதியின் திட்டம் என்ன?
செய்தி முன்னோட்டம்
புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு ரூ.24,000 கோடியை மாருதி நிறுவனம் முதலீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹரியானாவின் குர்கயான் மற்றும் மானேசரில் வருடத்திற்கு 15 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திறனைக் கொண்ட இரண்டு மாருதி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
அதன் தாய் நிறுவனமான சுஸூகியின் குஜராத் தொழிற்சாலையில் இருந்து வருடத்திற்கு 8 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், 18,000 கோடி முதலீட்டில் வருடத்திற்கு மேலும் 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் புதிய தொழிற்சாலை ஒன்றை ஹரியானாவின் சோனிபாத்தில் நிறுவ மாருதி திட்டமிட்டு வருகிறது.
அந்நிறுவன ஏற்றுமதியையும் மனதில் வைத்து எளிதாக துறைமுகத்துடன் இணைப்பு கொண்ட இடத்தை புதிய தொழிற்சாலைக்கு அந்நிறுவனம் தேர்வு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
ஆட்டோ
மாருதியின் புதிய வளர்ச்சித் திட்டங்கள்:
இந்தப் புதிய தொழிற்சாலை திட்டத்திற்கு அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதலீட்டை நிறுவனத்திற்குள்ளேயே திரட்டவிருக்கிறது மாருதி.
இந்தியாவில் கார் விற்பனையில் 50% சந்தைப் பங்கை மீண்டும் அடைய விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்தப் புதிய தொழிற்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் 2025-ம் ஆண்டில் இந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் கார் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ஆட்டோமொபைல் தொழிற்துறை 5% முதல் 7% வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை விட கூடுதலான வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது மாருதி.