இந்தியாவில் ரேஞ்சு ரோவர் வேலாரின் முன்பதிவை தொடங்கியது லேண்டு ரோவர்
2018 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரேஞ்சு ரோவர் வேலாரின் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் தொடங்கியிருக்கிறது லேண்டு ரோவர். இந்த புதிய ஃபேஸ்லிப்டின் மாடலின் டெலிவரி செப்டம்பரில் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறது லேண்டு ரோவர். ரேஞ்சு ரோவர் வேலாரின் இரண்டாவது ஃபேஸ்லிப்ட் மாடலை கடந்த பிப்ரவரியில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது லேண்டு ரோவர். முதல் ஃபேஸ்லிப்டில் மெக்கானிகல் அப்டேட்களை வழங்கியதால், இந்த இரண்டாவது ஃபேஸ்லிப்டில் காஸ்மெடிக் அப்டேட்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கிறது லேண்டு ரோவர். அடுத்த சில வாரங்களில் இந்தப் புதிய மாடலின் விலையை அந்நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், போர்ஷே மக்கான் மற்றும் ஜாகுவார் F-பேஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவிருக்கிறது புதிய வேலார் ஃபேஸ்லிப்ட்.
ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிப்டில் என்னென்ன மாற்றங்கள்?
புதிய வேலாரில் மறுவடிவம் செய்யப்பட்ட DRL-லுடன் கூடிய புதிய எல்இடி முகப்பு விளக்குகைக் கொடுத்திருக்கிறது லேண்டு ரோவர். இத்துடன் வேலாரின் முன்பக்க பம்பர் மற்றும் பின்பக்க டெயில் லைட்களுக்கும் புதிய லுக்கைக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். உள்பக்கம், ரேஞ்சு ரோவர் மற்றும் ரேஞ்சு ரோவர் ஸ்போர்டில் காணப்படுவதைப் போல புதிய டிசைன் கொண்ட டேஷ்போர்டு வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புதிதாக 11.4-இன்ச் கர்வ்டு டச்ஸ்கிரீனும் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய வேலாரில் முந்தைய மாடலைப் போலவே, 250hp பவர் மற்றும் 365Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், 204hp பவர் மற்றும் 400Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் மைல்டு-ஹைபிரிட் டீசல் இன்ஜினும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.