பெட்ரோல் பங்கில் மோசடி நடப்பதாக சந்தேகமா? உஷாராக இருக்க இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க
செய்தி முன்னோட்டம்
பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்போது நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. பெட்ரோல் பங்குகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், உங்கள் பணத்திற்கு ஏற்ற எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்யவும் உதவும் சில எளிய வழிமுறைகளை இதில் பார்க்கலாம். எரிபொருள் நிரப்பத் தொடங்குவதற்கு முன், மெஷினில் உள்ள டிஸ்ப்ளேவில் '0.00' காட்டப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில நேரங்களில் முந்தைய வாடிக்கையாளருக்குப் போட்ட ரீடிங்கில் இருந்தே தொடர வாய்ப்புள்ளது, இது உங்களை நஷ்டமடையச் செய்யும்.
அடர்த்தி
எரிபொருளின் அடர்த்தி சரிபார்த்தல்
ஒவ்வொரு மெஷினிலும் அன்றைய தினத்தின் எரிபொருள் அடர்த்தி அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். பெட்ரோலின் அடர்த்தி 730 முதல் 800 kg/m³ வரையிலும், டீசலின் அடர்த்தி 820 முதல் 860 kg/m³ வரையிலும் இருக்க வேண்டும். இந்த அளவில் பெரிய மாற்றம் இருந்தால், எரிபொருளின் தரம் குறைவாக இருக்கலாம். நீங்கள் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறீர்கள் என்றால், மெஷினில் ரீடிங் எகிறும்போது சட்டென்று இடையில் நின்று மீண்டும் தொடரக்கூடாது. ஒரே சீராக பெட்ரோல் விழுகிறதா என்பதைக் கவனியுங்கள். அடிக்கடி ரீடிங் இடையில் நின்றால், அது உங்கள் வாகனத்திற்குச் செல்லும் அளவைக் குறைக்க வாய்ப்புள்ளது.
அளவு
நாசில் பிடிமானத்தைக் கவனியுங்கள்
எரிபொருள் போடும் ஊழியர் மெஷினின் நாசிலை அடிக்கடி கைகளால் அழுத்திப் பிடிக்கிறாரா என்பதைப் பாருங்கள். நாசிலை விட்டு விட்டு அழுத்துவதன் மூலம் காற்று குமிழ்கள் உருவாகி, குறைந்த எரிபொருளே டேங்கிற்குள் செல்லும். நாசில் தானாக செயல்படுவதே சரியானது. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட எரிபொருள் அளவு குறைவாகத் தெரிந்தால், பெட்ரோல் பங்கில் உள்ள '5 லிட்டர் ஜார்' (5-Litre Measure) மூலம் அளந்து காட்டும்படி நீங்கள் கேட்கலாம். இது நுகர்வோரின் அடிப்படை உரிமை. ஒவ்வொரு பங்கிலும் இதற்காக தரப்படுத்தப்பட்ட ஜார் கண்டிப்பாக இருக்க வேண்டும்.