கார் கேபினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்!
வெயில் காலத்தில் காரின் உள்ளே ஏறியதும் சூடான கேபின் நம்மை வரவேற்கும். ஏசி இருக்கும் கார் என்றால் பரவாயில்லை, ஏசி இல்லை என்றால்? ஏசியை பயன்படுத்தாமல் இருந்தாலும் கேபினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ் இதோ! காரின் கண்ணாடிகளில் டின்ட் பேப்பர்களைப் பயன்படுத்துவது கேபின் சூட்டை சற்றே குறைக்கும். பெரும்பாலான கார்களில் டேஷ்போர்டு பிளாஸ்டிக்காலேயே தயாரிக்கப்பட்டிருக்கும். முன்பக்க கண்ணாடி மூலம் டேஷ்போர்டு எளிதில் சூடாகி கேபினையும் சூடாக்கும். டேஷ்போர்டின் மேல் துணியைப் போர்த்தி வைப்பதன் மூலம் இந்த சூட்டைக் குறைக்க முடியும். காரை பார்க் செய்யும் போது முடிந்த அளவிற்கு நிழலான இடத்திலோ அல்லது மரத்தின் அடியிலோ பார்க் செய்யுங்கள். இதனால் நேரடியாக வெயிலின் சூடு கேபினுள் இறங்காமல் இருக்கும்.
கேபின் சூட்டைக் குறைக்க டிப்ஸ்:
பார்க் செய்வதற்கு நிழலான இடம் கிடைக்கவில்லை, வெயில் படர்ந்த இடத்தில் தான் நிறுத்த வேண்டும் என்றால், காரின் ஜன்னல் கண்ணாடிகளை சற்றே இறக்கி விடலாம். இதன் மூலம் காற்றோட்டம் நிறைந்து கேபின் சூடு சற்றே தணியும். சீட்டின் மேல் கூலிங் குஷன்களையும், சோலார் பேன்களையும் பயன்படுத்தலாம். காரில் ஏறி சிறிது நேரத்திற்கு ஜன்னல் கண்ணாடிகளை முழுவதுமாக திறந்து விடலாம். இதனால் காரினுள் காற்றோட்டம் அதிகமாகி சூடு குறையும். அனைத்திற்கு மேல் ஏசியை சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்து வைத்தால் தேவையான போது பழுதாகாமல் சரியாக வேலை செய்யும்