'ஹோண்டா ஜீரோ': ஹோண்டா நிறுவனத்தின் புதிய உலகளாவிய EV சீரிஸ் அறிமுகம்
ஹோண்டா தனது உலகளாவிய மின்சார வாகன(EV) சீரிஸான ஹோண்டா ஜீரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. கனமான EVகளை ஒழித்து, இலகுவான வடிவமைப்பை கொண்ட மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதே ஹோண்டா ஜீரோவின் குறிக்கோளாகும். இதன் அறிமுக விழாவில் ஹோண்டா இரண்டு கான்செப்ட் வாகனங்களையும் காட்சிப்படுத்தியது. ஒரு வாகனம் ஸ்டைலான செடான் போல் இருந்தது. அதன் பெயர் 'சலூன்' ஆகும். மற்றொன்று அதிக அகலம் கொண்ட வேன் மாடலில் இருந்தது. அதற்கு 'ஸ்பேஸ்-ஹப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டும் "மெல்லிய" வாகனக் கட்டமைப்பை கொண்டிருந்தது. மேலும், அதில் சிறந்த காற்றியக்கவியலுக்கான குறைந்த தளங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
EVக்களுக்கான பிரத்தியேக H-மார்க் லோகோ
மெல்லிய, இலகுவான மற்றும் புத்திசாலித்தனமான என்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளுடன் ஜீரோ EV தொடர் கட்டமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய, மெலிதான மற்றும் இலகுவான வாகனங்களை உருவாக்குவதே அதன் குறிக்கோளாகும். இது எப்படி சாத்தியப்படும் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த சீரிஸுக்கு புதிய பொறியியல் அணுகுமுறையை அணுக உள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இந்த புதிய 'ஹோண்டா ஜீரோ' சீரிஸ் புதிய தலைமுறை EVக்களுக்கான பிரத்தியேக H-மார்க் லோகோவையும் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோண்டாவின் வரவிருக்கும் EVகள் உள்ளமைவைப் பொறுத்து, 'டெஸ்லா ஆட்டோ டிரைவிங்' போன்ற பல்வேறு வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.