5 லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட இருக்கும் ஃபெராரியின் முதல் EV
ஃபெராரி, அதன் சக்திவாய்ந்த பெட்ரோல் என்ஜின்களுக்குப் புகழ்பெற்றதாகும் இந்நிலையில், ஃபெராரி அதன் முதல் முழு மின்சார வாகனத்தை (EV) அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் தயாரிப்பு வரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. ஆடம்பர வாகன உற்பத்தியாளரான ஃபெராரியின் அறிமுக EVஐ வாங்க குறைந்தபட்சம் 500,000 யூரோக்கள்($535,000) செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்க்கு இது விற்கப்பட உள்ளது. தேவை குறைவதால் வெகுஜன சந்தை போட்டியாளர்கள் EV விலைகளை குறைத்து வருகின்றனர். எனினும், வசதி படைத்த வாடிக்கையாளர்கள் புதிய மாடலை ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஃபெராரியின் நம்பிக்கையை இந்த மூலோபாய நடவடிக்கை பிரதிபலிக்கிறது.
2025 ஆம் ஆண்டில் வெளியாகும் ஃபெராரியின் முதல் EV
ஃபெராரி தனது மின்சார காரை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இத்தாலியின் மரனெல்லோவில் மின்சார மோட்டார்கள், பேட்டரி பேக்குகள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களை உற்பத்தி செய்யும் புதிய உற்பத்தி வசதியை நிறுவுவதன் மூலம் ஃபெராரி நிறுவனம் இந்த வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த புதிய ஆலை, ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இது ஃபெராரி நிறுவனத்தின் உற்பத்தி திறனை மூன்றில் ஒரு பங்கு வரை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம், ஃபெராரி ஆண்டுதோறும் சுமார் 20,000 வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஃபெராரி உற்பத்தி செய்த 14,000க்கும் குறைவான கார்களை விட இது குறிப்பிடத்தக்க உயர்வாகும்.