இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஃபோக்ஸ்வேகன்? மஹிந்திரா நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தகவல்
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கை விற்க ஃபோக்ஸ்வேகன் ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் ஏற்கனவே $2 பில்லியன் முதலீடு செய்திருக்கிறது. எனினும், இந்திய சந்தையில் மிக அதிக விலை கொண்ட கார்கள் அதிகமாக விற்காமல் இருப்பதை கருத்தில் கொண்டு ஃபோக்ஸ்வேகன் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து ஆராய்ந்து, பொறியியல், விற்பனை மற்றும் கொள்முதல் திறனுடன் கூடிய ஒரு கூட்டாளரை கண்டுபிடிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று ஸ்கோடா ஆட்டோ தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் ஜெல்மர் கூறியுள்ளார். கடந்த காலத்தை விட மிகப்பெரிய வெற்றியை அடைய இரு தரப்பினருக்கும் உதவக்கூடிய பங்காளியைக் கண்டுபிடிப்பதே எங்களது குறிக்கோள் என்று ஜெல்மர் கூறினார்.
மஹிந்திரா நிறுவனத்துடன் இணையுமா ஃபோக்ஸ்வேகன்?
பொதுவாக நடுத்தர விலையுள்ள கார்களே அதிகமாக இந்தியாவில் விற்பனையாகின்றன. எனவே, மிக அதிக விலையுள்ள ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. உலகளாவிய தரத்திற்கு ஏற்ப ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிப்பதால், பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஃபோக்ஸ்வேகனுக்கு தயாரிப்பு செலவு அதிகமாகிறது. ஆனால், அதை ஈடு கட்டுவதற்கான விற்பனை இந்தியாவில் இல்லை. எனவே, ஃபோக்ஸ்வேகன் தனது பங்குகளை வேறு ஒரு நிறுவனத்திடம் விற்கலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஃபோக்ஸ்வேகன் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக இருந்தால் மஹிந்திரா நிறுவனத்துடன் தான் அது கூட்டு சேரும் என்று எதிரிபார்க்கப்டுகிறது. கடந்தகாலத்தில், மஹிந்திராவும் ஃபோக்ஸ்வேகனும் ஏற்கனவே பல ஒத்துழைப்புகளை செய்துள்ளதால் இந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.