டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா?
இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திற்கான தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கடந்த வாரம் அந்நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவிற்கு வருகை தந்தது. இந்தியாவின் அதீத இறக்குமதி வரியைக் குறைக்க இந்திய அரசுடனான எலான் மஸ்க்கின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் நுழையும் திட்டத்தைக் கைவிட்டார் எலான் மஸ்க். ஆப்பிள் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலும் தங்களது தயாரிப்பு தொழிற்சாலையை அமைத்திருக்கின்றன. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையிலான உறவு கடினமானது மற்றும் சீனாவில் கோவிட்-19 கொள்கைகள் உட்பட பல காரணங்களால் சீனாவில் இயங்கி வரும் தங்கள் தொழில்சாலைகளில் பொருட்களை தயாரிப்பதில் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன அமெரிக்க நிறுவனங்கள்.
அடுத்த தேர்வாக இந்தியா:
சீனாவை அடுத்த தொழில்சாலை அமைக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு சிறந்த தேர்வாக இருப்பது இந்தியா தான். ஆப்பிள் நிறுவன சாதனங்களைத் தயாரிக்கவும் இந்தியாவில் கூடுதல் தொழிற்சாலைகளை தொடங்க திட்டமிட்டு வரும் நிலையில், டெஸ்லாவும் தற்போது இந்தியாவில் தொழில்சாலை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. மத்திய தகவல் தொவில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும், டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க தீவிரமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். டெஸ்லாவின் சிஇஓ-வான எலான் மஸ்க்கும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது "இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறீர்களா?" என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக", எனப் பதிலளித்திருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் தொழிற்சாலைக்கான இடம் முடிவு செய்யப்படும் எனவும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் மஸ்க்.